என் மனதினைத் தொட்டு....

மீண்டு வந்திருக்கிறான் என் best friend...... இனம் புரியாதசந்தோசத்தைப் புசிக்க நான் புதன்கிழமை பாடசாலையிலிருந்து புறப்படுகின்றேன்.
நாலு வருஷம் அவனை நார் நாராய்க் கிழிச்சிருக்கும், நொந்து நூலாயிருப்பான்........... எனப் பல நூறு சிந்தனைகள் எனக்குள்ளை ஓடிச்சுது!
உடம்பு வைச்சிருக்குமோ......? வெள்ளையா இருப்பானோ...?முந்தின மாதிரி முக மலர்வோட 'சிரிச்ச முகமா' இருப்பானோ......?பல கேள்விகள் எனை அறியாமல் என்னையே கேட்டுக் குடைந்துகொண்டிருந்தன.

"அடுத்த ஞாயிறு உன்னைப் பாக்க வாறன் மச்சான்" எண்டு பஸ்ஸிலை கை காட்டிப் போனவனின் 'தேஜசு' இன்னும் கண்ணுக்குள்ளை படமாக் கிடக்குது! இந்த நாளுக்காக எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பன்.....மனசுக்குள்ளை அழுதிருப்பன்....நண்பர்களோட பகிர்ந்திருப்பன்..........ஆனாலும் அவனின்ரை வருகை எண்டுறது இன்னும் கனவாவே கிடக்குது!! மனசு நம்புதில்லை!!!!   (காத்திருப்பு இவனுக்காய்)

"பரதேசி, சனியன், மூதேசி, நாய்,..........' போன் எடுத்தாக் கதைக்கிறது இவ்வளவு தான்.எங்கட பிறண்ட்சிப் முழுக்கவுமே இதுக்குள்ளை தான் அடங்கும்???

யாழ்ப்பாணத்தில..... நானும் அவனும் படிச்சநாங்கள்..... ஒண்டாத்தான்வகுப்புக்கு போறநாங்கள்......மற்றவங்கள் எல்லாம் வந்து எங்கட நட்பைப் பாத்து எங்களோட உண்மையாப் பழகவருவினம். இப்பத்தைய ஆக்களைமாதிரி வேறையாரும் வந்து பழகினால் எங்கடை பிறண்ட்சிப்புக்குள்ளை பிரச்சனை வராது; அவனோடையோ என்னோடையோ ஆராவது பழகினால் எங்களுக்குச் சந்தோஷம் தான்.

அடிக்கடி எனக்கு 'அட்வைஸ்' சொல்லுவான். "நான் எண்டா நீ; நீ எண்டா நானடா மச்சான்".....அவனின்ரை இந்த வார்த்தையிலை எல்லா அன்புமே சிறகை மடக்கி அடங்கிப் போகும்.தனக்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் பொறுமையாக சமாளிப்பான். ஆ.....னால் எனக்கொரு பிரச்சினையெண்டால் ஆளைப் பாக்கமுடியாது......பூ..க..ம்..ப..ம் வெடிக்கும்!!

உப்பிடித்தான் ஒருக்கால் 'அன்பு' சேரின்ரை கிளாக்கர் என்னோடை கொழுவிப் போட்டார். அண்டைக்கென்டு இவன் ஊருக்குப் போட்டு லேட்டா வந்தவன். 'அப்பாடி......' நான் மண்டிக் கொண்டு முன் வாங்கில்லை இருந்தன்.

அன்பு சேர் அழகாப் படிப்பிப்பார்.ஆழமா ஆராஞ்சு சொல்லித்தருவார். 'என்னடா தம்பி' 'ஒட்சியேற்றம் தாழ்த்தல்' 'நாடித்தேடி ஓடிப் போகும் '+' '-' அப்பாடி அவற்றை கிளாஸ் ஒரு திரையரங்கம் தான். எனக்கு கெமிஸ்றியில தான் கூட றிசல்ற். அது வேற கதை. உவன் வேல்முருகனும் பெஞ்சோவும்(இவனை அறிய) சேரின்ரை பாடத்துக்கு பகிடியா 'போட்டோசொப்' எடிட்டிங் செய்து 'பிறிண்ட்' கொண்டுவந்து கலக்குவினம். கிளாஸ் ஒருமாதிரி முடியுது......'லப்பு டப்பு டப்பு லப்பு' 'லப்பு டப்பு டப்பு லப்பு' ஹாட் அடிக்குது பலமா. அங்கால றம்மியா, ஜெனி, ஜென்சி எண்டு ஒரு கூட்டம் நிக்குது. 'ரியூட்' வாங்குற சாட்டில அவளுகளோட கதைப்பமெண்டால் பின்னால பெரிய சத்தம். "யாதவோடை ஆர் கொழுவினது?" ம்.........விடை சொல்லிப் பாரன். அன்பு சேரின்ரை ஒபிசுக்குப் போனாச்சு. "சேர் இண்டைக்கு நான் ரண்டில ஒண்டு பாக்கிறது தான்." "யாதவோட கொழுவினது ஆர்?"
சேர்
"தம்பி..." ஒரு தோளைப் பிடிச்சார்.நான் "டேய் என்னடா இது??" எண்டு கேட்டுக் கொண்டே நிக்கிறன். "நீ சும்மா இரு" எனக்கு அதட்டல். பிறகென்ன "கம்" தான். சேருக்கெண்டால் சரியான ஆச்சரியம். "தம்பி உமக்கு எங்கையிருந்து இவ்வளவு கோவம் வந்தது???"
பிறகென்ன சமாளிப்புத்தான் "உவர் உப்பிடித்தான்" ஆளுக்கு ஒரு மாதிரி" "பொடியளைப் பேசுறது தான் தொழில்" " இனி ஏதுமெண்டால் நான் ஒண்டும் சொல்லன்"......... "அப்புறம் நீராச்சு அவராச்சு." இப்பிடி ஒருவகையா ஆளைச் சமாளிச்சாச்சு. உண்மையிலை அன்பு சேரிலை எங்களுக்கு இண்டைக்கும் அளவு கடந்த அன்பு. சேரும் நாங்களும் இப்பவும் அப்பிடித்தான்.

கன்னமெல்லாம் சிவந்து கிடக்கு..... வாடா மச்சான் 'சுவிஸ்' இலை (எங்கடை வாடிக்கையான சாப்பாட்டுக் கடை) மிதிவெடியும் ரீயும் குடிப்பம். ம்....."சரி வா" இந்த நிலை என்னை மீண்டும் மீண்டும் வாட்டிச்சுது.

வீட்டை போனன். கட்டிப்பிடிச்சு முத்தம் குடுக்கவேணுமெண்டு மனசார நினைச்சநான். மெலிஞ்சு கறுத்திருந்தான்.
"வாடா மச்சான்..........." பழைய புன்னகை, களிப்பு, உற்சாகம் எதுவுமே அவனிலை இருக்கவில்லை..........

Comments