துஜீவ்: ஒரு வெங்காயம்
நீங்கள் ஏதாவது முட்டாள்த் தனமான காரியம் செய்யும் போது மற்றவர்கள் உங்களை செல்லமாக ”வாய்பாத்தது”, ”வெங்காயம்”, “ரியூப் லைற்று”, “ ”விளக்கங்கெட்டது” என்றெல்லாம் வாழ்த்தியிருப்பார்கள். நானும் எனது மாணவச் செல்வங்களை இவ்வாறு வாழ்த்தத் தவறுவதில்லை.
அண்மையில் கிடைத்த சிறப்பான அனுபவமொன்று: இவ்வாறுதான் எனது மாணவச் செல்வமொன்றை நன்றாகத் திட்டி வகுப்பை விட்டுக் கலைத்து விட்டேன். இவ்வாறான செயற்பாடுகளில் எனது(சாரி எமது) பொட்னி ஆசான் ’குணா’ வினுடைய ஸ்ரைலைப் பின்பற்றுவது வழக்கம். ”போய் கொப்பர் கொம்மாவைக் கேட்டுப் படியன், இங்கை எதுக்கு வாறனியள்? வெங்காயங்கள்” இது குணசீலன் சேரைத் தழுவிய என்னோடை வார்த்தைப் பிரயோகம்.
சரி, இந்த சீன் நிறைவடைய "My favorite teacher" என்ற heading இலை ஒரு பத்து வசனம் எழுதிக் கொண்டு வா எண்டு குடுத்தன். கொப்பி திருத்துவம் எண்டு உட்கார்ந்தால் பலரின் கொப்பிகளைத் திருத்தும் போது என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு தங்களது பிடித்தமான ஆசிரியராகச் சித்தரித்தார்கள். இடையில் ஒரு கொப்பி: பெயர்:- ரசூல் பீபி, ஆமா, பிடித்த ஆசிரியர்- துஜீவ் சேர். இது கூட எனக்குப் பெரிய ஆச்சரியமில்லை. பிள்ளையைக் கூப்பிட்டன். ”நான் தானே உன்னைக் கொடுமைப்படுத்தித் துரத்திற வாத்தி. என்னை மற்றவங்கள் போட்டதிலை ஒரு ஞாயம் இருக்கு. நீ என்னண்டு சேரின்ரை பேரைப் போடுவாய்?” இப்போது கூட எனது மிரட்டும் தொனிக்கு முற்றுப்புள்ளி வந்துவிடவில்லை.
பிள்ளை கதைக்குது: “அதில்லை சேர், உங்களை என்னோட வாப்பா மாதிரி நெனக்கிறன் சேர்.” எனக்கு உண்மையாக் கண்ணிலை சிலதுளிகள் எட்டிப்பார்க்க வெளிக்கிடுது. “சரி பிள்ளையள் எனக்கு ஒபிசிலை ஒரு வேலை இருக்கு. ஹோம் வேக்கை செய்து கொண்டு இருங்கோ, மிச்சக்கொப்பி ஆறாம் பாடம் திருத்தித் தாறன்” விடை பெற்று வெளிக்கிட்டன்.
இந்த வகுப்புக்கு நான் புதுசாப் போன வகுப்பாசிரியர். ஒரு எட்டாம் ஆண்டுக் குழந்தையெட்டையிருந்து இவ்வளவு ஆத்மார்தமான வார்த்தை வந்திருக்கென்றால்.....? எனது பெறுமதியை இப்போதெல்லாம் என்னால் சரியாக உறுதிசெய்துகொள்ள முடிகிறது. ஆமா எனது பால்ய காலத்து நண்பன் வாசுதனின் கவிதை மாதிரி “சாதிக்க நிறைய சறுக்கலுண்டடா துயீப்”
*-----------------------*-------------------------*-------------------------*
வெங்காயமென்று நாங்கள் மற்றவர்களை மட்டந்தட்டுவதற்கு உபயோகித்தாலும் இந்த வெண்காயத்துக்கும் (எங்களூரில் அழைக்கப்படுவது) எனக்கும் ஆத்மார்த்தமான தொடர்பே உண்டு.
நீங்கள் கொலசிப்புக்கு (scholarship) படிக்கேக்கை படிச்சிருப்பியள்- ஒற்றி-சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய நீண்டகால ஒப்பந்தம்.
இப்பிடித் தான் எங்களுக்கும் 1992 ம் ஆண்டு தோட்ட வெளியிலை ”கைற்றியோடை” என்ற வெங்காயச் செய்கை 45 பட்டி நிலத்துண்டொன்று பரமேஸ் மாமியிடமிருந்து 30,000 ரூபா ஒற்றிக்குக் கிடைக்கிறது(அம்மா தாலிக்கொடி அடகு வைத்தவா எண்டு தான் நினைக்கிறன்). அதுவரைக்கும் சகோதரங்களோடை கூலிக்கு மாரடிச்ச அப்பாவின் திருப்புமுனை வாய்ந்த சிந்தனை அது. அவ்வளவு நாளா காசுக்கு கஷ்ரப்பட்ட எங்களுக்கு அந்த நிலம் ஒரு வரப்பிரசாதமே.
அம்மா தான் நாள் முழுக்க அதுக்குள்ளை நிண்டு நிலத்தைப் பண்படுத்தி களை தெரிஞ்சு கஷ்ரப்பட்டவ. நான் சின்னப் பொடியனெண்டபடியாலும் அம்மா என்னைப் “பூ” மாதிரிப் பார்த்தபடியாலும் எனக்கு கல்விக்கல்லூரி போகும் மட்டும் மண்வெட்டியெடுத்துக் கொத்தவோ தண்ணி மாறவோ தெரியாது.
ஐயா(அம்மப்பா) அஞ்சு நாளுக்கொருமுறை அல்லது நாலு நாளுக்கொருமுறை வெங்காயத்துக்குத் தண்ணி மாறுவார். ஐயாவுக்குச் சாப்பாடு குடுக்கக் கூட அம்மா தான் போவா.
அந்த நேரம் உண்மையிலை எங்களுக்குச் சரியான கஷ்ரம். ஆனா அப்பான்ரை பேரிலை கடை இருந்த படியால் எல்லாரும் எங்களைப் பணக்காரர் எண்டு நினைக்கிறறவை. உண்மையிலை கடை அப்பான்ரை பேரிலை சகோதரங்கள் பதிஞ்சது ஆரேனும் பிடிச்சுக் கொண்டு போறதெண்டாதங்கடை தலையைக் காப்பாற்றிக் கொள்ளத்தான்.
அந்த நேரம் அப்பாவைப் பல பேர் பகடைக்காயாப் பயன்படுத்தியிருக்கினம். உதாரணத்துக்கு அந்த நேரத்திலை மருந்துக்குத் தடையாம் (எனக்கு ஒன்று அல்லது இரண்டு வயதிருக்கும்.) அப்பா தான் உள்ள ஒழுங்கையெல்லாம் விழுந்தடிச்சு தனது சித்தப்பா முறையான டொக்டர் ஒருவருக்கு அவரது சொந்த நலனுக்காக மருந்துகள் பருத்துறையிலை இருந்து கொணந்து குடுப்பார் (சித்தப்பா எண்ட ஒரே மரியாதைக்காக). இப்பிடிப்பட்டவரை வெங்காயமெண்டா அந்த நேரம் ஏற்றுக்கொள்ளத் தானே வேணும்.
அந்த நேரம்(1992ம் ஆண்டு) எடுத்ததுக்கெல்லாம் மறியலிலை இருக்கவேணுமாம். எனது தங்கச்சி பிறந்து 42ம் நாள் தான் உள்ளை போன அப்பா ஆறு மாதங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியை வந்தார்.
இப்பிடி சகோதரம் என்றும் உறவென்றும் தன்னைப் பொருட்டாக மதிக்காத அப்பா இவ்வாறான சில சம்பவங்கள் தவிர இன்றுவரை எனக்கு ஒரு எட்டிப்பிடிக்க முடியாத உதாரண புருசராய் இன்றுவரை திகழ்கிறார்.
*--------------------*-----------------------*------------------------*
அப்பாவுக்கு ஞானம் வந்ததே தம்பிமாரால் துரத்தப்பட்ட பிறகு தான்(1998). அந்த ஒரு வருசத்துக்கு அம்மா இந்த வெங்காயத் தோட்டத்திலை விளைஞ்ச அறுவடையையும் பிற ஊரிலை வாங்கிற மற்ற மரக்கறியளையும் சந்தையிலை கொண்டுபோய் விப்பா. தம்பியும் பள்ளிக்கூடமில்லா வேளையில் கூடப் போவான். நான் மட்டும் கொஞ்சம் வயதுக்கு வந்துவிட்டபடியால் ஒதுங்கிக் கொள்வன்.
அந்த நேரம் எனக்கெண்டு ஒரேயொரு நீல நிறச் சேட்டுத் தான் இருந்தது. கேம்பிறிச் ரியூசனுக்கு அதைத் தான் தோச்சுத் தோச்சுப் போட வேணும். சன்லைட் கட்டியால் அம்மா இரவு தோச்சுத் தருவா. காலையில் உலர்ந்த அந்தச் சேட்டை மடித்து தலையணையின் கீழ் வைத்துவிட்டுப் போவேன்.இண்டைக்கு மனிசி துவைச்சுத் தாற புதுத் துணியிலை கூட அந்தச் சந்தோசம் இல்லை.
வறுமையிலும் செம்மையாத் தான் அம்மா எங்களை வளத்தவ. இதுவரைக்கும் யாருக்கும் இவன் முதலாளியின் பையன் அல்ல “பிச்சைக்காறன்” எண்ட சந்தேகம் வந்ததேயில்லை. நானும் தம்பியும் ஹாட்லியிலை மற்றப் பிள்ளைகள் மாதிரியே படிச்சம். மற்றப் பொடியள் றோல், போண்டா சாப்பிடும் போது அம்மா நித்தமும் தாற பத்துரூபாக் காசைச் சேமித்து தங்கச்சிக்கு ஏதாவது வாங்க வேணும் எண்டு நாங்கள் ரண்டு பேரும் நினைச்சுச் சேமிப்பம். பள்ளிக்கூடத்திலை பேத் டேக்கு பொடியள் தாற ரொபியோ என்னவோ தங்கச்சிக்குக் குடுத்துத் தான் சாப்பிடுவம். தவராசா வாத்தியார் கூட அந்த நேரம் இதைப் பெருமையா முன்னுதாரணமாச் சொன்னதா ஞாபகம்.
எனக்குத் தெரிய எங்கடை வீடு தான் எங்களூரிற் கடைசியாகக் கட்டப்பட்ட கல்வீடு (2003). அம்மா ஒவ்வொரு பெட்டியாக தெரு மண் சுமந்தும் முட்டாளோடு முட்டளாய்த் தம்பி சீமெந்து குழைத்தும் கல் சுமந்தும் கட்டிய கனவு இல்லம் அது. (அப்போது கூட இந்த ஏ.எல் படித்தமையால் என்னால் கூடமாட உதவியாய் இருந்திருக்க முடியவில்லை.)
*--------------------*-------------------*--------------------*
வெங்காயங்களோடு அந்த மணத்தினோடு விவசாயச் சூழலில் வாழ்ந்ததாலோ என்னவோ வாயில் பலதடவை இந்தச் சொல் மீண்டும் மீண்டுமாய் எனக்குள்ளிருந்து பிறப்பெடுத்து விடுகிறது.
நான் எனது கணித ஆசானான மரீஸ் உடன் ஹாட்லியிலை படிப்பிச்ச பொழுது நான் வகுப்பெடுத்துக் கொண்டு நிக்கேக்க ”இது ஒரு வெங்காயம்” எண்டு தனக்கேயுரிய பாணியில் என்னைக் கைகாட்டிக் கதைக்கும் போது இனம் புரியாத சந்தோசத்தில் குழைந்ததும் எனது மாணவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டதும் வாழ்க்கையில் வேறை ஆருக்குக் கிடைத்திருக்கும்.
*----------------------*---------------------*-----------------------*
எங்களுடைய கஷ்டமுணர்ந்து காசெடுக்காமற் படிப்பிச்ச, ஒவ்வொரு வெற்றிக்கும் பாராட்டுக் கிண்ணம் தந்து ஊக்குவித்த ஆங்கிலத்தை எமக்குள் அத்திவாரமிட்ட ’தேவி ரீச்சரையும்’ 200 ரூபாவுக்கு எங்கள் மூன்று பேருக்கும் நாலு வருஷம் ஆங்கிலம் படிப்பிச்ச சரவணமுத்து சேரையும் (முத்துக் கிடிகிடின்னா) எப்படி மறக்க முடியும்?
வெங்காயத் தோட்டமொன்று |
கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற போது வெங்காயங்களையும் அதனைப் பயிரிடும் விவசாயிகளையும் பஸ்ஸிலிருந்தவாறு ஹாயாக ரசிக்கவும் படமெடுக்கவும் முடிந்தது. இன்னொரு உழைப்பாளிச் சமூகத்தின் உரமான கைகளை எம் மனக்கண்களாற் தொட்டுணர முடிந்தது.
-துஜீவ்....வாத்தியார்.....
Comments
Post a Comment