கிளியத்தையும் ஊர்த் தொண்டும்....
'ஐயான்ர திதி எப்பவாம்' நில்லடா ஒருக்கா கிளியக்காட்டைப் போட்டு வாறன் .
'இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்யலாம்?' கிளியக்காட்டைப் போனா ஏதேனும் சொல்லுவா.
'பழைய ஆக்களின்ரை வரலாற்றை ஆரெட்டைக் கேக்கலாம்..?' உதுக்குச் சரியான ஆள் உந்தக் கிளிஅக்கா தான்.
கிளிஅக்கா, குஞ்சக்கா, மலரக்கா, சின்னக்கா, சின்னக்கிளிஅக்கா என்று அறியப்பட்ட எங்களூர்ப் பிரபலங்களின் உண்மையான பெயர்கள் காலத்தால் பாவனையிழந்து மங்கிப் போயின.
கிளியக்கா ஐயாத்துரை புவனேஸ்வரி என்ற இயற்பெயருடன் இப்பூவுலகிற் பிறந்தார்.(அவரது பெயர் மழலையில் கிளி மாதிரிக் கொச்சையாய்க் கதைத்தமையால் வந்ததோ என்னவோ...?)
அப்பாவுக்கு ஒன்றுவிட்ட சகோதரி என்பதாலும் பழக்கதோசம் காரணமாகவும் எனக்கு 'கிளியத்தை' என்றழைப்பதே இயல்பானது. எங்களூரின் பெரிய பெரிய படிப்புக் காரர் எல்லோரும் கிளியத்தைக்கு பெட்டிப் பாம்பாய் அடங்கி விடுவர். பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், டாக்டர்கள் என்று யாரென்றாலும் அக்கா என்றால் அடங்கி விடுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்பிடி என்ன விஷேசம் அவவிலை?
அந்தக்காலத்திலை பெண்கள் வீட்டுக்குள்ளும் குசினிக்குள்ளும் முடங்கிக் கிடந்த பொழுது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக தனது கல்வியை சிறப்பாக மேற்கொண்டதன் பயனாக 1965இல் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகின்றார் கிளி அத்தை. எங்கள் கிராமம் பெண்களுடைய ஒழுக்கம், விழுமியங்களில்(Indeed, it has been developed on the basis of delicate morals and discipline) மிகவும் பழைமையான கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. இவற்றிலிருந்து விடுபட்டு தனியே கண்டி சென்று படிப்பது என்பது மிகவும் சவாலானதொன்று. பெருமைப்பட வேண்டிய விடயம்-முதன்முதலாக பல்கலைக்கழகத்துக்கு ஒரு பெண்மணி வடமராட்சியிலிருந்து சென்றது என்றால் அது கிளி அத்தை தான்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக அன்று கிளியத்தை புறப்படுகிறார். தனது கல்விக்காலத்தில் சிறப்பாகக் கல்வியை முடித்துக் கொண்டு சமூகத்துக்கு சேவையாற்ற அந்த நங்கை புறப்படுகின்றார். புங்குடுதீவைச் சேர்ந்த பிற்காலத்தில் உதவி அஞ்சலதிபராக இருந்த திரு.ஐயாத்துரை நடராஜா வாழ்க்கைத்துணையாகிறார். திருகோணமலை, வவுனியா போன்ற வெளிமாவட்டங்களும் கரவெட்டிப் பிரதேசமும் இவரது கடமையுணர்வுள்ள சேவையைச் சுவீகரித்துக்கொள்கிறது. கரவெட்டிப் பிரதேச செயலகத்தில் திட்டமிடல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறுகிறார்.
நடராசா மாமாவின் வாழ்வுப் பரியந்த முடிவுக்குப் பிறகு தனிமையில் அருகிலுள்ள சக்கலாவத்தையான் துணையிலும் தைரியத்திலும் இறைவனை மட்டுமே நம்பிய ஜீவனை நான் நன்கறிவேன். எனக்கென்னடா பிரச்சனை வைரவர் உதிலதானே இருக்கிறார். எட்டிக் கூப்பிட்டா சின்னண்ணா ஓடியந்திடுவான். நான் தனிய இருப்பன் என்று அவரது யாரையும் சாராத தன்மை இங்கு நினைவுகூரத்தக்கது. சுவாமி விவேகானந்தரின் புத்தகங்கள் இவரிடம் அனேகம் இருக்கும். கல்விக்கல்லூரியில் நான் பயின்ற காலத்தில் விடுப்பில் ஊரை எட்டிப் பார்க்கும் போது அத்தையையும் புத்தகங்களையும் தரிசிக்கத் தவறுவதில்லை. அத்தை என்றால் எனக்கு அப்படியொரு பிரியம்.
நான் கொழும்பால் ஊருக்குத் திரும்பிய பொழுது ஆறுதலாயிருந்ததும் இவரே. கிளியத்தையில் உள்ள சிறப்பியல்பு என்னவெனில் எந்தக் குடும்பங்கள் சுமைதாளாமல் அல்லது ஆதரவற்று நிற்கின்றனவோ அங்கு கிளியத்தையின் பிரசன்னமும் ஆதரவும் இருக்கும். அறிவுரை கூறியே ஆளாக்கி விடப்பட்டவர்களில் எனது அம்மாவும் ஒருவர். எமது குடும்பத்தின் பொருளாதார, விழுமிய வளர்ச்சியின் பின்புலமும் முதுகெலும்பும் (the background and back bone of economical and moral development) கிளியத்தை தான். எனது திருமணப் பேசுவார்த்தைகளின் இழுபறிக்குள் திடமான தீர்மானங்களை எடுத்த பங்களிப்பில் இவரையும் பரமகுரு மாமாவையும் என்றும் உயரத்திலேயே வைத்து நோக்கவேண்டியுள்ளது.
ஓய்வுபெற்றததன் பின்பு மத்தியஸ்தர் சபையில் அங்கத்துவம் வகித்த ஒரேயொரு பெண்மணியாகவும்,ஓய்வூதியர் சங்க ஸ்தாபக உறுப்பினராகவும் திகழ்ந்தார். பெண்களுடைய பிரச்சினைகளை ஒரு பெண்மணியால் தான் தீர்த்துவைக்கமுடியும் என்ற அடிப்படையில் (an actual fact of recognizing and finding for remedial action) வடமராட்சியின் புத்திஜீவியான (one of the intellectuals) கிளியத்தை உள்வாங்கப்படுகிறார். இந்த மத்தியஸ்தர் சபை என்பது நீதிமன்றங்களுக்கு சென்று வறியமக்கள் பணம்செலவழித்து நீதிபெறுவதைக்காட்டிலும் குறுகிய காலத்தில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் காத்திரமான மையங்களாக விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரதி ஞாயிறுகளில் நடைபெறும் இந்த அரிய பணிக்காக அத்தை கடைசிவரை சென்று பணியாற்றினார்.
இருதயத்தின் பெரு நாடியில் 100 விழுக்காடு அடைப்பு இருந்தமையால் கொழும்புக்குச்சென்று சத்திரசிகிச்சை பெற்றும் மக்கள் சேவையே மகேசன் சேவையென மத்தியஸ்தர் சபையின் சேவைகளுக்காக அவர் களைத்துக் களைத்துச் செல்லும் வேளைகளில் நான் எனது மோட்டார் வண்டியில் கூட்டிச் சென்றிருக்கின்றேன். 'எடேய் துசி' 'எடேய் சபேசன்' என்ற அந்தக் கூப்பாட்டுக்குள் ஆயிரம் அர்த்தங்களும் மேலானதொரு பாசச் செறிவும் இருந்ததென்பது மிகவும் வெளிப்படையானதொன்று.
"கிளியத்தை தவறீட்டாவாம்" யாழ்ப்பாணத்திலிருந்து வந்த அழைப்பினை எதிர்கொள்ள முடியாது தான் போனது. இரவோடிரவாய் மழையிலும் குளிரிலும் கடைசியாய்த் தரிசிக்க நூறு மைல் தொலைவிலிருந்து குன்றும் குழியுமான பாதைகளின் முகாரியோடு கிட்டத்தட்ட 5- 6 மணித்தியாலப் பயணத்தின் பின் ஊரை அடைந்தேன்.
ஒரு நிரப்பப்படமுடியாத வெறுமையை எமது சமூகத்துக்கு கிளியத்தை விட்டுச் சென்றிருந்தா. எனக்கும் இந்த சமூகத்துக்கோ மட்டுமில்லை அவவோட சேர்ந்த பின்னேரத்தில் அவாவின் வீட்டின் முன் கூடும் ஆதரவற்ற பஸாருக்கும் கிளியத்தையின் பயணம் மிகப்பெரிய இடைவெளிதான்.
குறிப்பு: மேலே நான் பதிவேற்றியிருக்கிற படங்கள் எனது திருமணப் பேச்சுவார்த்தையின் போது என்னால் எடுக்கப்பட்டன.
-துஜீவ்
My Cousin Ms. Parameswary Ambalavanar Pathmanathan entered Peradeniya University in 1959. We are from Thambachetty Puloly west Point Pedro. I think lots of girls from Vadamarachchy have entered Peradeniya University even prior to 1959.
ReplyDelete