பெஞ்ஜமினும் நானும்: வாழ்வு மாறுதல்களும்
யார் இந்தப் பெஞ்ஜமின்?
முழுப்பெயர்: பெஞ்சமின் ஜீவனன் பெனடிக்ட்
தகப்பன்: ஓய்வு பெற்ற எஞ்சினியர்.
எமது பிரதேசத்திலிருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீற்றர் தொலைவுக்கப்பால் யாழ்ப்பணப் பட்டணத்துக்கு அண்மையிலுள்ள ஒரு ஊரிற் பிறந்தவன் இந்தப் பெஞ்சமின்.
படித்த பாடசாலை: சென்.ஜோன்ஸ் கல்லூரி
விசேட திறமை: கம்ப்யூட்டரில் ஒரு விற்பன்னன்.
தற்போது: மருத்துவமாணவன்/ மருத்துவர் (பங்களாதேஷ்)
முன்னர்: பிரச்சினைகளின் போது (மட்டும்) எனக்கு ஆலோசனை செய்யும் ஒருவன்.
என்னை விட வயதில் குறைந்தவன்.
அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் கேக்கிறது எனக்குக் கேக்காட்டிலும் உணர முடிகிறது.
ஹாட்லிக்கல்லூரியில் படித்த பலர் இருக்கையில் இவனை ஏன் தூக்கி பிடிக்கிறியள்?
நீங்கள் கேக்கிற நியாயமும் எனக்குப் புரிகிறது.
ஆம்! இவனின் நட்பால் தான் எனது வாழ்க்கையில் பல மாறுதல்களும் அனுபவங்களும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் இந்த ஆனைக்கோட்டை ரஜினகுமார் எனக்கு வைத்த 'யாதவ்' (இந்திய கிறிக்கட் வீரர் ஒருவரின் பெயராம். சத்தியமா எனக்கு அந்த வீரரைத் தெரியாது.) என்ற பெயரினை அதிக தடவை உபயோகித்து என் உண்மையான பெயரை மாற்றியவன். (இன்னும் கடுப்பு மாறவில்லை எண்டுறது வேறை கதை).
இவனால தான் இந்த ஆசிரியர்த் தொழிலுக்கே வரவேண்டி வந்தது.
அந்த நேரம் எங்கடை ஊரிலை ஒரு பொடியளும் இல்லை. எல்லரும் போர், பிரச்சனை எண்ட பயத்திலை student visa வெளிநாடு போயிட்டாங்கள். எனக்கு அது வரைக்கும் வெளிநாடு போறதில் உடன்பாடும் இல்லை, அதைப் பற்றி துளியும் நினத்ததுமில்லை. பெஞ்சமின் தான் எனக்கு 'ஐடியா மணி'. அங்க போனா டக்கெண்டு பெரிய ஆளா வந்திடலாமடா. உன்னை மாதிரிக் கெட்டிக்காரன் அங்க போன நல்லமடா. இஞ்சதை உழைப்பு என்னத்துக்குக் காணும்? பாதையும் பூட்டியாச்சு. பிரச்சனை வேறை... நெடுக பிரச்சனைக்குள்ளை எவ்வளவு காலம் எண்டு இருக்கிறது.? எண்டு உசுப்பேத்தி விட்டான். கொழும்புக்குப் போய் என்ன செய்ய வேணும், எங்க படிக்க வேணும், வீசா form எப்பிடி நிரப்ப வேணும் (சாம்பிளும் தந்தான்), எந்த Representativeவை தொடர்பு கொள்ள வேணும்? சகல விபரங்கலையும் டிப் டொப்பா கொணந்து தந்தான். நானும் கொஞ்ச மாதத்துக்கு கொழும்பிலைதான் இருப்பன். உனக்கும் உதவியா இருக்கும். யோசியாதை. ஆலோசனையும் பண்ணினான்.
எனக்கு இருந்த ஒரேயொரு பலம் 'தவம் டொக்டர்' U.K யிலை F.R.C.R காரருக்கு Instructor. (பெரிய டாக்டர்). சிலோன் வந்த போது எனக்கு தேவையான எந்த உதவி எண்டாலும் கேளுங்க எண்டு நம்பிக்கையை விதைத்து பெரிய மகான்(?) எண்டு நினைக்கும் அளவுக்கு என்னிடம் ஒரு நல்ல அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு மனுசன். பெரும் சிரமத்தின் மத்தியிலை பத்து நாள் யாழ்ப்பாணத்து ரயில் நிலையத்திலை பகலிரவெண்டு கால்கடுக்க, பசி வயிற்றைக் கிள்ள லைன்லை நிண்டன். லைன் எண்டா அப்பிடியொரு லைன். ஒண்டாப் படிச்சவனும் ஒருத்தனும் திரும்பிப் பாக்கிறான் இல்லை (எனக்கெண்டா நிதி, சுமன் போன்றோர் நிண்டதா ஞாபகம்) ஒரு தடவையிலை நூற்றுக்கணக்கானவர்கள் தான் பயணம் செய்ய முடியும். முதல் நாள் முன்னாலையிருந்து எனக்கான லைனில் இடம் பிடிக்க போனன். ரண்டாம் நாளும் அதே மதிரித்தான். பல வகையான உத்திகளைக் கையாண்டு பாத்தன். ம்ஹூம் ஒண்டும் எடுபடயில்லை. இப்பிடி ஒன்பது நாள் கழிந்த்தது. பத்து நாளும் லைன்லை நிண்டு சில கஸ்டமர்களை அறியக்கூடிய வாய்ப்பு வந்தது. . எனக்கெண்டா ஒரு நாளிலை போயிடலாம் எண்ட நம்பிக்கை போயிட்டுது.
அப்ப தான் ஒரு ஊர் தெரியாத அக்கா எனக்கு முன்னாலை நிண்டா. அவவோடை ஒரு ஒப்பந்தம் போட்டன். லைன் இண்டைக்கு குழம்பினா முன்னுக்கு அவா அவா நிண்டா என்னை தம்பி எண்டு ஸ்பொன்சர் பண்ணவும் நான் நிண்டா அவா அக்கா எண்டு ஸ்பொன்சர் பண்ணுறன் இது தான் அந்த ஒப்பந்தம். அவவும் ஓம் எண்டா. எங்கள் இரண்டு பேருக்கும் எப்பிடியாவது இண்டைக்குக் கப்பலேறிப் போயிடவேணும் எண்ட உறுதியே மேலிட்டது. கடைசியிலை லைன் குழம்பிசுது. நான் நிண்டது ஒரு முந்நூறு பேர்தள்ளி எண்டா அக்கா என்னைவிட இன்னும் நூறு பேர் தள்ளி நிண்டாங்க. ஒருவரையொருவர் எங்கை எண்டு கண்டுபிடிக்கிறதே பெரிய விசயம். லைனை விட்டு அசைஞ்சா பறிபோயிடும். என்ன செய்ய....? யோசிச்சுக்கொண்டு நிண்டன். சரி எதுக்கும் போய் ஒருக்காப் பாப்பம். முன்னாலை பின்னாலை நிண்டவங்களிடை கையைக் காலைப் பிடிச்சு நான் திருப்ப வரேக்க விட வேணும் எண்டு இன்னொரு ஒப்பந்தம் போட்டு ஒரு மாதிரி லைனைத்தேடிப் பிடிச்சிட்டன். முதல் சொன்ன மாதிரி நூறு பேர் தள்ளி நிண்டா. இப்ப என்னக்கா செய்யிறது....? எனக்கு இண்டைக்கும் நம்பிக்கை போட்டுது. இதிலை கொஞ்சம் நில்லும் தம்பி முன்னாலை அம்மாவும் வந்தவா எங்கை எண்டு பாத்திட்டு வாறன். நான் லைனுக்குள்ளை நுழையவும் பின்னாலையிருந்து பெரிய கலவரக் குரல்கள் கேட்டன. "ஆரடா உள்ளை நுழையிறது?" "நாங்கள் என்ன சொறியவே இதிலை காத்துக்கட்டி நிக்கிறம்...?" அக்காதான் சொன்னா "சரி இதிலை ஒருதரும் நிக்க வேண்டாம் நான் முன்னுக்கொருக்கா போயிற்று வரேக்கை விடவேணும்". குரல்கள் ஒரு மாதிரி அடங்கியது.
'தம்பி, நீர் போய் உம்மடை இடத்திலை நில்லும்.' அக்கா கட்டளை போட்டா. நான் ஒரு பத்து நிமிடங்கள் நெரிசலுக்குள்ளை நசிஞ்சு கொண்டு நிண்டன். பின்னலையிருந்து ஒருவர் கூப்பிடுற சத்தம். அக்கா நிண்டிருந்தா. அம்மா முன்னுக்கு பத்து நம்பருக்குள்ளை நிக்கிறா எண்டு சந்தோசத்தோடை சொன்னா. நான் இந்த முறை யாரிட்டையும் சொல்லேலை. அவ முன்னுக்கு போனா. அம்மாவோடை லைன்ல நிண்டா. ஆனா முன்னுக்கும் பின்னுக்கும் நிண்டவங்கடை முழி என்னைப் பாத்துப் பிதுங்கியது. எங்கடா இவனும் நுழையப்போறானா எண்டு. நானும் நுழைய வெளிக்கிட்டன். முதல் கேட்டதை விட பலமான சத்தங்கள் கேட்டன.(பின்னுக்கு நிக்கிற பத்துப் பதினையாயிரம் பேரை பேக்காட்டினவங்களெல்லோ சும்மாவோ...?) பக்கத்திலை நிண்ட ஆமிக்காறனும் என்னைப் பாத்து முறைத்தான். நான் எனக்குத் தெரிஞ்ச சிங்களத்தில அவனுக்கு விளங்கப் படுத்தினன். அக்கா மீது பல கேள்விகள் எழுந்தன. அக்கா பொறுமையை இழந்து பேச வெளிக்கிட்டார். இது என்ர சொந்தத் தம்பி தான். ஏன் உங்களிட்டை நான் விசாரிக்கிறனே எங்க ஏது எண்டு. நான் என்ட தம்பியோட வராம உன்னோடையே வாரது..? நீ வா தம்பி (ஆபத்துக்குப் பாவமில்லை எண்டு அப்பிடிக் கூப்பிட்டா) அவங்களும் விட்ட பாடில்லை. சொந்தத் தம்பி எண்டா கிளியரன்ஸ் ஒண்டா இருக்க வேணும் காட்டுங்க பாப்பம். நான் மலைச்சுப் போனன். அக்கா தொடர்ந்தா நான் கலியாணஞ் செய்திட்டன். அவர் வேறை குடும்பம். நான் வேறை குடும்பம். அப்ப எப்பிடி கிளியரன்ஸ் ஒண்டா வரும். அதுக்காக அவன் என்ர தம்பி இல்லை எண்டு ஆகீடுமா? உங்கடை வாயை மூடுங்க. நான் இப்ப துணிவா கஸ்ரப்பட்டு உள்ளை போனன். சில மணி நேரங்களின் பின் கப்பல் இண்டைக்குப் போகுதாம் எண்ட தகவல் வந்தது. லைன் நகர்வோடை நாங்களும் நகர்ந்தம். தெல்லிப்பளைக்கு பஸ்ஸிலை போய் காங்கேசந்துறை போய் கப்பலேறி திருகோணமலை போனன். கப்பல் குலுக்கின குலுக்குக்கு 17 தரம் சத்தி எடுத்து எழுந்து நிக்கக்கூட முடியாமல் ஒருவாறு திருகோணமலையிலை இறங்கி பஸ்ஸிலை கொழும்பு போனன்.
அங்க ஒருமாதிரி அப்பாவின்ர பிரண்ட் வீட்டை போய் சேர்ந்தாச்சு. பெஞ்சமின் கோல் எடுத்து, முதல் படிக்கிறதுக்குரிய ஒழுங்காக பிரிட்டிஷ் கவுன்சிலை ரெகாமண்ட் பண்ணினான். சில காலத்தில் முழுமையாக என்னை வழிப்படுத்தி விட்டு திடீரென்று பங்களாதேஷ் பயணமானான்.
நண்பர்களில்லாத ஆலோசனை செய்ய யாருமே இல்லாத தனிமை என்னை வாட்டியது. கடுமையாகப் படித்தேன்.வீசா ஒழுங்கினை லோகோ குணசேகர (பெஞ்சோவின் representative) கவனித்துக் கொண்டார். நான் UCAS மூலம் யுனிவஸிட்டிகளுக்கு apply பண்ணி எனக்கு இந்த ரிசல்டும் I.E.L.T.S ரிசல்டும் ஒரு கல்லிலை ரண்டு காய் மாதிரி எனது உழைப்புக்குக் கிடைத்த ஊதியமாய்க் கிடைத்தன.
என்னோட படித்தவர்கள் 42 பேரில் 40 பேர் சிங்களவர்கள். ஒருவர் மட்டும் தமிழர், மகி அண்ணா என்கிற களுபோவிலை ஆஸ்பத்திரி டாக்டர். இந்த இடைக் காலத்தில் கிடைத்த நட்புகளில் லசந்த பெரேரா என்கிற லசந்த அய்யா என்னை தனது சொந்த தம்பியாகவே அரவணைத்து நடத்தியவர். என்னை வழியனுப்புவதற்காக தானும் தனது மனைவி அமாலி அக்காவும் விடுப்பு எடுத்து முழுநாளையும் என்னோடு செலவளித்தது இன்றும் என் மனதைத் தொடுகின்றது.
ஆனால் எனக்கென்றிருந்த ஸ்பொன்சர் ஒரு டுபாக்கூர் என்று கடைசியிலை தான் விளங்கியது. எனது நம்பிக்கை அனைத்தும் வீண்போகிவிட்டது. அவர் தந்திரமாகக் கையை விரித்து விட்டார். இவர் செய்த இந்தத் துரோகத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இவர்கள் உண்மையில் மனித குலம் என்று சொல்வதற்கு தகுதியில்லாதவர் என்று அன்று பட்டது. இன்றும் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
பெஞ்சோவின் ஆலோசனையின் பேரில் கல்விக்கல்லூரி போட்டிப்பரீட்சையில் time passing க்காக பரீட்சை எழுதியிருந்தேன்.
என்னை நடுரோட்டில் விட்ட (இங்கே அழுத்தவும்-கொடூரமான அந்தத் தனிமைக்கு) அம்மாவின் சொந்த மைத்துனனான அந்த டாக்டரை வாழ்க்கையில் முதன் முதலாக கடுமையாக மனதுக்குள் திட்டினேன். அப்போது தான் என் மனம் ஆறியது. இந்தத் தோல்வியை வெளியில் காட்டிக்கொள்ளவும் இயலாது. இதற்கிடையில் போட்டிப்பரீட்சையில் பாஸ் பண்ணியுள்ளதாக றிசல்ட் வந்தது. வாழ்க்கையில் அடுத்த இடி விழுந்தது. எனக்கு அடிப்படையில் இந்த வாத்தித் தொழிலில் வெறுப்பு இருந்தது. "வக்கற்றவனுக்கு வாத்தி வேலை" என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்தேன். வேறு வழி இல்லை. ஒருவாரு மீளக் கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்.
கல்விக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியருக்கான residential trainee யாக பதிவு செய்து கொண்டேன்.
இவ்வளவு துன்பங்களின் மத்தியில் வந்த எனது உணர்வுகளை எந்த ஒரு சீனியரும் புரிந்து கொள்ளவே இல்லை. முதல் நாளே போட்டுத்தாக்கினார்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல். இது மாதக்கணக்கில் தொடர்ந்தது. அவர்க்ளின் கோயிங் டவுணுக்குப் பிறகுதான் எங்களுடைய batch க்கு சுதந்திரமே வந்தது. மிருக உணர்வுகளை அந்த ஆசிரியர்கள் அரங்கேறிச் சென்றிருந்தார்கள். depressed and oppressed desires ஐ வெளிப்படுத்துவதற்கு அந்த ஆசிரியர்களைப் பொறுத்தவரை கல்விக்கல்லூரியும் நாங்களும் ஒரு களம்.அவ்வளவு தான். அந்தளவுக்கு அவர்களது வெறியாட்டம் சகிக்கமுடியாது போனது என்பதே உண்மையானது. (அவையளும் அவையளின்ர நடப்பும்) இதெற்கெனவே தனியாக ஒரு பதிவிடுகிறேன்.
second yearலை காலை அசம்ப்ளியில் 350 ஆசிரியர்களுக்கும் கிழமையில் மூன்று தினங்கள் தனியொருவனாக ஆங்கில அறிவூட்டியிருக்கிறேன். பாராட்டுப் பெற்றிருக்கிறேன். இந்த அனுபவத்தில் இன்று professional ஆசிரியரானதும் சிறப்பாக நெறிப்படுத்துகிறேன். என் பிள்ளைகள் நன்றாகக் கல்வி கற்கிற பொழுது சந்தோசமடைகிறேன். இப்பொழுதெல்லம் எனக்கு இந்த வாத்தி வேலை அலுப்படிப்பதே இல்லை. எனது மாணவர்களும் என்னோடு அன்போடு பழகுகிறார்கள். ஆங்கில பாடத்தினை ஆர்வத்தோடு கற்கிறார்கள். நான் வெறும் கருவிதான் என உணர முடிகிறது.
இதுக்கெல்லாம் காரணம் நானா? அந்த டாக்டரா? நண்பன் பெஞ்சமினா?
ஆம்! என்னை பொறுத்தவரை பெஞ்சோ நீ எங்கிருந்தாலும் உனக்கெண்டொரு அழியாத பங்கிருக்கடா...
குறிப்பு: பெஞ்சோவின் வீட்டின் வெளித்தோற்றம்(27.12.2011 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்)....
Comments
Post a Comment