ஊர்ப் "பரவணி"
எங்கள் ஊர்களில் பொதுவாக ஆண்களே தொழில் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ தமக்கென தனித்துவமான கூட்டணி அமைத்து விடயங்களை அளவளாவிக் கொள்வார்கள். இவற்றுள் பரவலான ஊர்க்கதைகள், உலகத்துக் கதைகள் எல்லாம் அடிபடும். தாம் சம்பந்தப்பட்ட நல்ல விடயங்கள் தவிர்ந்த அத்தனை 'நல்ல' விசயங்களும் தாங்கள், தங்கள் குடும்பம் சம்பந்தமான புளுகுமூட்டைகளும் தாராளமாக அரங்கேற்றப்படும்.. அதையெல்லாம் உங்களுக்கு நான் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை.
இந்தக் கூட்டணிகளை நாங்கள் "பெண்டுகள் பார்லிமென்ட்" என்று அழைத்ததுண்டு. சில இவ்வாறான கலந்துரையாடல் மையங்கள் ஆக்கபூர்வமானவையாக இருந்து வருகின்றதையும் மறுப்பதற்கில்லை. அவை ஒரு "இலவச ஆற்றுப்படுத்தல் நிலையங்களாக"அவ்வாறான ஒன்றுக்கு இங்கே அழுத்தவும்இருந்தால் அது மகிழ்ச்சிக்குரிய ஒன்று தான். பெண்களுடைய பிரச்சினைகள் அவர்களுடைய சொந்த உணர்வுகளினடிப்படையில் தீர்வு காணப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்க ஒன்று.
ஆனால் பலவேறு ஒன்றுகூடல் மையங்களில் ஒத்துப்பாடும் கூட்டமோ அல்லது பகுத்தறிவாளர்களைக் கொண்டிருக்காத குறுகிய நோக்கங் கொண்ட சிலரோ சேர்ந்தியங்கும் பொழுது சமூகம் பாரிய இடர்களை எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையின் யதார்த்தம் நிதர்சனமானது. இவையே சமூகப்பிரச்சினைக்குரிய மையங்களாக ஊதிப்பெரிதாக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றமை மறுப்பதற்கில்லை.
இந்த, சமூகத்தின் அடிமட்ட நிலையிலுள்ள உளத்தில் பிறழ்வுகொண்ட மனிதர்கள் ஒரு கதையை விவரிக்கும் விதம் மிகவும் தேர்ச்சியானதானதாகவும் மறுதலிக்க முடியாதளவுக்கு நேர்த்தியானவையாகவும் இருப்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கும்.
இந்த சம்பாஷணைகளுக்குள் சிக்காத யாரும் எங்கள் ஊர்களில் இருக்க முடியாது. இவர்களின் மனோபாவமும் மற்றவர் மீதான அக்கறையும் வியப்படையும் அளவுக்கு மிகப்பெரிதாக தெரிந்தாலும் அவையெல்லாம் ஊருக்கு உபதேசங்களே.
இவ்வாறானவர்களை 'படியளப்பவள், 'படலை திறப்பவள்', 'கதைகாவி' என்று பலதிருநாமங்கள் கொண்டு அதனையும் தங்களைத் தாங்களே தலைப்பிட்டுக் கொள்கிறார்கள்.
யாரும் நல்லா வந்தால் இவர்களின் தேகம் முழுவதும் எரியுமாம். ஒருகதை கிடைத்தால் அதனை கை, கால் , மூக்கு, முழி வைத்து மற்றவர்களிடம் சொல்லவில்லை என்றால் நிம்மதியைத் தொலைத்துவிடுவார்களாம்.
இதே வேலையைச் செய்யும் வேலைவெட்டியில்லாத ஆண்மணிகளும் சிலர் ஊர்களினுள் உள்ளார்கள். அவர் பத்தும் பலதும் அறிந்த மனுஷன் என்று புகழ் பாடினால் யார் யாரோடு தொடர்பு தொடங்கி யாருக்காவது பெரிய பதவி கிடைத்ததால் இனி இவருக்கு 'சம்திங்' கதிரையிலை முட்டாது வரைக்கும் விலாவாரியாக பொருள், இடம், காலம் வழுவாது பிரசங்கமே வைத்து விடுவர். "உனக்கெண்டபடியால் சொன்னநான்" அல்லது " உனக்கு மட்டும் தான் சொல்லுறன்" என்று கதை வேறு விடுவார். இதை நம்பினோமென்றால் சம்பந்தப்படாத யாரோ மூலமாக அதே கதையை அறியும் பொழுது எனக்குச் சொன்ன "உனக்கு மட்டும் தான்" ஊர் முழுக்க சொல்லப்பட்டிருக்கும்.
பொறாமையின் விஷ ஊற்றும் தீய எண்ணங்களின் வளர்ச்சியும் இவ்வாறான நிலையில் தான் எமது சமூகத்துள் விதைக்கப்படுகின்றன. சிந்தனைகளும் சிதைக்கப்படுகின்றன.
எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்ததொரு எதிகாலத்தை அமைத்துக் கொடுப்போம்.
இவ்வாறான பல தரப்புக் குறைபாடுகளுக்குப் பதிலாக பொழுதுபோக்கிற்காக தமக்குப் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்வது இவர்கள் வாழ்க்கைக்கு வசந்தத்தைக் கொண்டுவரும். இவர்கள் சுய தொழில் முயற்சியிலோ அல்லது தங்கள் குடும்பங்களுடைய கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துமிடத்து ஆரோக்கியமான விளைவுகளின் பலாபலன்களையும் சமூக வகுப்பின் படிஉயர்வின் சம்பாத்தியத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தங்கள் வாழ்வுப் பரியந்தத்தின் அர்த்தத்தைத் தாங்களே கண்டறிந்துகொள்ள முடியும்.
-துஜீவ்
Comments
Post a Comment