நீ வருவாயென......

கடந்த நினைவுகளை-உன்னோடு
நடந்த பாதை தனில்
நனைத்துக் கொள்கிறேன்
நினைவுகளோ சினப்புக்களாய்
நீங்கிய பாடில்லை.......

நனவுலகம்,
கண்களில் முட்டி மோதித்
துயிலெழுப்புகிறது;
சோம்பலோ சுழன்றடித்துத்
தூங்க வைக்கின்றது

ஓ.....என்னினிய உறவாடலே
ஓலமிட்டு அழும் என் மனக்குரலின்
ஓங்களம்-உன்
காதுகளைக் குடையாமற்
பார்த்துக்கொள்........

என் தூக்கமும்
நினைவுகளுமே
உன்னைத் துயிலெழுப்பும் என்பதற்காய்
நான் இன்னமும்
விழித்துக் கொண்டிருக்கிறேன்.......

விழிகளோ,
எள் நீராய் நெய்சுரக்க
பேந்தியபடி முழிக்கிறது!!
காலம்-என்னைக்
கரைப்பதற்கு முயல்கிறது.........

நானோ!
மணல் மேடும் அல்ல
அனல் வேகிய உடலும் அல்ல
என்றும் என்றும்
உன் நினைவுகளே!!!

உடலதற்கு,
காட்டில் ஆற்றுதல் உண்டென்பதால்;
நினைவுகளும் ஆறுதலதற்காய்
உனைவிட்டு
அகல மறுக்கிறது........

உன் நினைவும் கனவுமே-என்னைக்
கரை சேர்க்கும் என்பதற்காய்
நான் இன்னமும்
காத்துக் கொண்டிருக்கிறேன்......

நுரையடிக்கும் கடலலையே!
வான் தொடுமோர் வரை நிரையே!
என் உறவாடல் உடனே
நித்தமும் நித்தமும்
சேதியொடு
நீ வருவாயென்று......

-துஜீவ்
உதயனில் வெளிவந்த கவிதை.

Comments