பொங்கு மகிழ்வின் பதிவு...
பொங்கல் தினத்தின் சிறப்புகள் பலப்பல. பதிவுத் துறையில் இருக்கின்ற பலருக்கு தை பிறந்தால் வழி பிறக்குதோ இல்லையோ மொழி மட்டும் தடையில்லாமல் பிறந்துவிடும். தை மாதத்திற்குரிய ஆயத்தங்கள், பட்டம் விடுதல் போன்ற ஒத்திகைகள் வயது வேறுபாடின்றி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் முன்பிருந்தே அனைவருக்கும் ஆரம்பமாகிவிடும்.
உண்மையில் இந்தத் தை மாதம் என்பது நம்பிக்கைக் கீற்றுக்கள் நிறைந்த ஒரு மாதம். ”தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற ”நம்பிக்கையே வாழ்க்கையில்” சின்னச் சின்ன புல்பூண்டு தொடக்கம், பூக்கள் தொடக்கம் அனைத்துமே தம் மகிழ்ச்சியை தங்களிற் தாங்கி நடை போடத் தொடங்கும்.
அந்த வருடத்துக்குரிய உற்சாகமான தொடக்கத்தின் ஒரு அடையாளம் இந்தத் தைத் திருநாளோடு ஆரம்பமாகிறது. சோம்பல் முறித்து தம் அடிப்படைகளை சரியாக உணர்ந்து செயற்படும் ஒரு பிரதானமான பணியின் கருப்பொருள் இந்தத் திருநாளில் அடங்கியுள்ளதை யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியும்.
அதாவது உழவர்கள் தமது தொழிலில் தொழில் முன்னேற்றம், தங்கள் தொழிலுக்குரிய ஆழமான காரணம், அதில் கதிரவனுடைய பங்களிப்பு, தொடர்ந்து வரும் தினத்து மாட்டுப் பொங்கலில் வாயில்லா ஜீவன் மனுக்குலத்துக்குச் செய்யும் தன்ன்னலம் கருதாத தொண்டு இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவும் உழுதுண்டு வாழும் வாழவைக்கும் தொழிலின் சிறப்பியல்பை மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறும் இருண்மை அகற்றியாகவும் இவற்றின் மூலமாக சமூகக் கட்டமைப்புகளின் நற்சிந்தனை ஊற்றுக்குரிய மூலமாகவும் தைத் திருநாள் செயற்படுகின்றது என்றால் மிகையாகாது.
இன்று என் துணைவியாருக்குக் கூடமாட உதவி செய்யும் பாக்கியம்(?) கிடைத்தது. ஒரு சாதாரண பொங்கலில் எத்தனை சடங்குகள் சம்பிரதாயங்கள்?? அருகிலிருந்து அனைத்தையும் பக்குவமாகச் சொல்லித் தந்தார். சிவபெருமானுக்கு முருகக் கடவுள் பிரணவமந்திரத்தினை உபதேசித்த உணர்வு. உண்மையில் இந்த உலகில் அறிந்து கொள்ள வேண்டிய சம்பிரதாயங்களின் அடிப்படைகள் நிறையவே விரவிக் கிடக்கின்றன.
மணங்கமழ் பாரிஜாதப்பூ தவழ்கிறதென் கையில் |
சர்க்கரைப் பொங்கல் திறமாத்தான் இருந்தது. நான் சமைத்ததை எல்லோருடனும் இணைந்து உண்டோம். வயசு போன ஐயா ஒருவரோடு தனகித் தனகி இன்றைய பொழுதைக் கழித்ததும் அவரிடமிருந்து பல பழைய விடயங்களை பொறுக்கியெடுத்துக் கொண்டமையும் இன்றைய நாளின் பசுமையைச் சிறப்பாக்கியது. உணமையில் வயது வந்தவர்களும் அவர்களது அனுபவங்களும் வேத வாக்குகளே (அவ்வாறான ஒன்றுக்கு)
*----------------*---------------------*------------------*
எமது கல்லூரியில் பிரதி வெள்ளிக் கிழமைகளில் பிள்ளையாருக்கு பொங்கிப் படைத்து உண்பது வழக்கம். தரங்கினியும் கேதுஷாவும் பொங்கல் செய்வதில் தனித் திறமையைக் காட்டுவார்கள். நாங்கள் தேங்காய்ப் பால் பிழிதல் மற்றும் அடுப்பு வேலைகளில் ஒன்று சேர்வோம்.
துதிப்பாடல்களை சங்கீதக் காரர் தலைமையில் பாடி இடைக்கிடை வைரவரின் கழுத்தில் தொங்கும் வடைமாலையையும் பார்த்துக்கொள்வோம். கலர் கலராக சாறிகளில் முதலாம் வருடக் காரரின் அழகுக் காட்சியைத் தரிசிக்க பலர் தவறுவதில்லை. பெயர் விபரங்கள் தெளிவாக உண்டு. தற்போதைக்குத் தணிக்கை செய்து கொள்வோம்.
நாங்கள் வேட்டி அணிந்து கொள்வோம். மற்றவனுடைய புதுச்சேட்டைத் திருடி அணிந்து கலர் காட்டுவதில் எவ்வளவு இன்பம். முதன் முதலில் புதுச் சேட்டுப் போட்டு மற்றவர்களது கவனத்தை ஈர்த்த பின் உள்ள சிக்கல் என்னவென்றால் சேட்டுச் சொந்தக்காரன் அடுத்தமுறை தனது அதே சேட்டை அணியும் பொழுது“ஏன் இன்னாருடைய சேட்டைப் போட்டிருக்கிறாய்?’ இன்று பெண்கள் தரப்பில் கேட்கும் பொழுது விடைசொல்லவும் விளங்கப் படுத்தவும் பலவிதமாய் நெளிவதுதான்.
சிலர் பந்தாவுக்காக பச்சை ரீ சேட்டுடன் கொடிக்கம்பத்துக்கு அருகில் காத்திருப்பார்கள். அவர்களது கோஸைச் சேர்ந்த பெண் அபிமானிகள் பொங்கல் மற்றும் வடையைப் பதுக்கி எடுத்துக் கொண்டுவந்து கொடுப்பார்கள். கொள்ளைக் கோஷ்டியாகிய நாங்கள் மடக்கக் காத்திருப்போம். கப்பமாக ஒரு வடையேனும் தராவிட்டால் எமக்கில்லாத வடை அவர்களுக்கும் இல்லாமற் போகும். (என்னா வில்லத்தனம்.....!!!) தந்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரும் வீட்டு ஸ்பெசலில் அவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாய் உண்டு.
*--------------*--------------------*-----------------*
எங்கள் வீட்டுக்கு அண்மையில் மிகச் சிறியதும் ஆனால் பிரபலமானதுமான அம்மன் கோவிலொன்று உள்ளது. அம்மனாச்சி என்று அதில் தனது வாழ்நாளின் குறிப்பிட்ட காலத்தை(50 தொடக்கம் 60 வருடங்களாயிருக்கலாம்) இறுதி வரையில் கழித்த ஒருவர் இருந்தார். எங்களூரின் மிக வயதில் கூடிய மூதாட்டியும் அவரே.
நடக்கக் கூடிய குழந்தை வயதிலிருந்து அன்னாரின் தரிசனத்திலும் அரவணைப்பிலும் கழித்த பசுமை இன்றும் அழியாதிருக்கின்றது. தம்பியைக் கண்டவுடன் அவர் சொல்லும் வார்த்தை “எடேய் நீ உத்தரமெல்லெ, உனக்கு சத்திரத்திலை சோறடா” என்பார்.
பலர் பலப்பல ஊர்களிலிருந்து வந்து சாத்திரம் கேட்டுச் செல்வார்கள். அவரது சாத்திரம் சொல்லும் படலம் பாடல் வடிவிலேயே இருக்கும். எனக்கு சாத்திரத்தில் நம்பிக்கை மிகக் குறைவென்றாலும் என்னால் இன்றுவரைக்கும் மறுதலிக்க முடியாதிருப்பது அன்னாரின் இறப்புக்குப் பின்னர் அவரது சொற்களனைத்தும் எங்களூரிற் தவறாமல் நிகழ்ந்தேறியதென்பதே. குறிப்பாக ”கடலால் ஒரு பெரும் அனர்த்தம் வரும், அவலம் நிகழும், ஆனால் எங்களூருக்கு எந்தப் பாதிப்புமில்லை” என்ற பொய்யாமொழி சுனாமியோடு உண்மையாய்ப் போனது. அம்மனாச்சி சுனாமிக்குப் பத்து வருடங்களின் முன்னராயே மடிந்து போனார்.
உத்தரத்துக்கு சத்திரத்திலை சோறோ இல்லையோ சித்திரப் பறுவம், நாயன்மார் குரு பூசை போன்ற பிரதானமான தினங்களில் அம்மனடியில் தான் எமக்கு சாப்பாடு. பாளையச் சோறு அல்லது பாளையக் கஞ்சி என்று அழைக்கப்பட்ட அந்தச் சாப்பாட்டு வழக்கு அம்மனடியோடையே இல்லாமற் போனது. தொண்ணூறுகளில் நாம் மிகச் சிறார்களாயிருந்த போது கழித்த நாட்களவை.
அதாவது பிளா அல்லது தட்டுவம் என்று சொல்லப் படுகின்ற பனையோலையால் தயாரிக்கப்பட்ட நம்மூர்த் தயாரிப்பில் கஞ்சியூற்றிச் சுடச்சுடத் தருவார்கள். நாவில் எச்சிலூற ஊற ஊதி ஊதிச் சாப்பிடுவோம். இன்று வரைக்கும் அவ்வாறான மிகச்சுவையான உணவு உண்டதில்லை. இன்றைய பொங்கலில் இவ்வாறு எங்களூரவர் ஊர்கூடி உண்ட நினைவலைகளை மீட்டும் போது பாளையக் கஞ்சியும் உந்தியின் ஒரு பக்கமாய் இருக்கிற உணர்வு(சத்தியமா சாப்பிட்ட அன்றே சமிபட்டுட்டுது). இவ்வாறான ஒன்றாகிய எங்களூரின் “பூசைப்பந்தல்” சம்பந்தமான பதிவை வெகு விரைவில் எழுதுகிறேன்.
இந்தப் பிளாவில் அந்தக்காலக் குடிகளிடையில் வேறுபாடு காட்டப்பட்டதும் மேலதிகமான தகவலாகும். அதாவது கொண்டை இருக்கும் பிளா உயர்குடியினருக்குரியதென்றும் கொண்டை இல்லாதவை ஏனையவர்களுக்கும் அதாவது குடிமைகளுக்குரியதென்பதும் ஒரு வழக்கமாகக் காணப்பட்டதாம்.
பொதுவாக பிளா என்றால் கள்ளருந்தப் பயன்படுத்தப்படுவதென்றும் கஞ்சி, பொங்கல் மற்றும் சோறுண்ணப் பயன்படுத்தப்படுவதை தட்டுவம் என்றும் அழைப்பார்களாம்.
அவ்வாறானதொன்றை செய்வித்துப் புகைப்படமெடுத்துப் பதிவிட முயல்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்...
-துஜீவ் வாத்தியார்
Comments
Post a Comment