சிரிப்பு: சமூகம்
மனிதனுக்கு மாத்திரமேயுரிய உணர்வு வெளிப்பாடுகளில் ஒன்று இந்தச் சிரிப்பு. “வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்றெல்லாம் கூறுவதுண்டு. ஆம்! பல நோய்களுக்கு நிவாரணியாக இந்தச் சிரிப்பு விளங்குகின்றது.

சிரிக்காத மனிதன் உலகில் இருக்க முடியாது. சிரிக்காத இளவரசி சிரித்து ரோமாபுரி அழிவடைந்ததாக வரலாறே உண்டு. திரௌபதியின் சிரிப்பை ஒட்டித் தான் மஹாபாரதப் போரே நடந்தது என்பது வெள்ளிடை மலை. சிரிப்பாலே வினையைத் தேடிக்கொண்ட நம்மூர் வரலாறுகளும் உண்டு. “சீறிவரும் பாம்பை நம்பினாலும் சிரித்துவரும் பெண்ணை நம்பாதே” என்று எனக்கு பெண்மணிகளே தீபாவளி வாழ்த்து அட்டைகள் அனுப்பியதுண்டு.
பொதுவாக எமது ஊர்களில் ஒருவருக்குக் கீழே வேலை செய்வதென்றால், அவர்களது அதிகாரங்களை சாதகமாகப் பயன்படுத்துவதற்குரிய மிகப் பெரிய சாதனம் சிரிப்பு. உப்புச் சப்பில்லாத ஒன்றை மேலதிகாரியொருவர் முன்வைக்கும்பொழுது கூட அதனை அந்த வருடத்துக்குரிய சிறந்த நகைச்சுவையாகக் கருதி சிரிப்பது மிகவும் வியப்பைத் தருவது. தம்மோடுள்ள நண்பர்களை மேவி நடப்பதற்கும் அர்த்தமில்லாத சிரிப்பைக் கொட்டுகின்றார்கள்.
இன்று வளர்ந்துவரும் இளைஞர் யுவதியிடத்து இருக்கக்கூடிய ஒரு பிரதான வார்த்தை ‘நோண்டி’ என்பதாகும். அதாவது மற்றையவர்களைக் கேலி செய்வது. ஒருவர் மிக சீரியசாக கதைக்கும் பொழுது(சத்தியமா எனக்கு சீரியசுக்கு தமிழ் தெரியாது-அதாவது தனது பேச்சில் அக்கறை எடுத்து என நினைக்கிறேன்) சிரித்துப் பாருங்கள். அவரது முதல் நண்பர்(?) நீங்களாகத்தான் இருப்பீர்கள். பதிலாக ‘டும்’ என்றும் அவரது அன்புக்குள்ளாகலாம். இப்படிப் பலவிதமாக ‘நொங்கெடுப்பவர்கள்’ எமது இளைஞர் சமூகத்தில் உண்டு.
இளைஞர் கூட்டம் ஒன்று சேர்ந்தால் பல்கலைக்கழக புத்திஜீவிகளைக்கூட நோண்டி செய்து சிரித்துக் கேலிசெய்யும் அளவுக்கு அறிவு மட்டமும் பகுத்தறிவும் கூடிவருவதும் இயல்பானது. இதனால் புத்திஜீவிகள் புத்திபேதலித்து தமது பிரதிமையை இழந்து கேலிக்குள்ளான சம்பவங்களைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றோம்.
பகிடியின் பொருட்டு வாத்திமாருக்கு பட்டம் கொடுத்தெல்லாம் சந்தோசப்பட்டிருக்கின்றோம் (நமக்கு என்ன பெயர் சூட்டினார்களோ....??)


”உவன் இப்பிடியும் செய்தவன் தானே” “இப்ப பார் வாழ்க்கையிலை சேரைப்பற்றி கிஞ்சித்தும் குறைவாநினைக்காதவன் போலக் குழைகிறான்” என்று நினைக்க மனம் ஒப்பவில்லை.
எனக்குள் ஒரு தீர்மானம் இருக்கிறது. மாணவர்கள் மாணவர்கள் தான். அவர்கள் உருவ அளவில் பெரியவர்களாக இருந்தாலும் மனம் மிகவும் குழந்தைத் தன்மையுடையது. அவர்களின் குழப்படிகளுக்காகவோ, அவர்களது தீய செயல்களின் தொடக்கத்திற்காகவோ முழுமையாகக் கண்டித்து அவர்கள் செய்த குழப்படியை பெரியளவில் கையாள்வதை விடவும் அவப்பெயரை ஏற்படுத்துவதை விடவும் அவர்களையும் அவர்களது உணர்வுகளையும் சமகால, எமதுகால (இறந்தகால) அடிப்படையில் புரிந்துகொண்டு அவர்களுக்குப் புரியச்செய்து புகட்டுவதே சாலச் சிறந்ததாகும்.

எல்லாப் பிள்ளைகளிடத்தும் அவர்களது எதிர்காலம் சம்பந்தமான கனவுகளைக் கொண்டுவருவது முக்கியமானது. டாக்டர் அப்துல் கலாம் சொன்னது போல ”இளைஞர்களே கனவு காணுங்கள்.” ஆசிரியர்களே அவர்களைக் கனவு காணத் தூண்டி, நெறிப்படுத்துங்கள். எமது பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கைகளில் உண்டு.
நாளைய எமது சமூகம் முகமலர்வோடு சிறக்கட்டும்.
Comments
Post a Comment