தினேசின் காதல் கதை


”சேர்! சேர்! உங்களெட்டை ஒருவிசயம் சொல்ட்டே?அடிப்பீங்களா சேர்!” ”

”என்ன மகன் சொல்லடாப்பு” “இல்லை சேர். அடிக்கக்கூடாது”

“இல்லை, சேர் சும்மா அடிக்கிறனானே? சொல்லப்பு”

 ”சேர்! தினேஸ் லவ் பண்றான் சேர்....” சேருக்கு தூக்கிவாரிப் போட்டது. இந்தச் சம்பவம் நடந்தது எத்தனையாம் தர வகுப்பாயிருக்கலாம் ?

இது நடந்தது ஒரு தென்மராட்சி பாடசாலையில்.... தரம் மூன்றைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தான் இந்த கதையின் நாயகன். அவன் தினேஸ். அம்மா அப்பாவின் அரவணைப்பு அரிதானது அவனுடைய குடும்பம். மிகவும் பிந்தங்கிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அவனுடைய ஊரும் பாடசாலையும். தினமும் குளித்து, துவைத்துலர்ந்த ஆடையணிந்து சுத்தமாக வருவது என்பது அவனது அகராதியிலேயே இருந்ததில்லை. எழுதுதல் படித்தலிலும் பாடசாலை வருவதிலும் கூட அவன் மிகவும் குறைந்த நிலையிலுள்ள மாணவனே.அந்த நாயகனோட கனவுக்கன்னி தீபா. இவள் இந்த தினேசுக்கு முற்றிலும் மாறான குணஙகளும் நடத்தையும் கொண்ட எழில் நங்கை. பாடசாலை வருவது ஒழுங்கு, நேர்த்தி, படிப்பு என்று அவளது பாதையே புறம்பானது.

இந்த லட்சணத்தில் அவளை, வெறும் மனிதனாகப் பிறந்த அவனுக்குப் பிடித்துப்போனதில் ஆச்சரியமேதுமில்லை. சிறிய வயதுகளில் மழலைகளுக்கு அவர்களது அம்மாவும் அப்பாவும் ஹீரோக்களாக இருப்பார்கள். அதன்பின்பு பாடசாலையில் அவர்களுடைய ஆசிரியர்களும் ஏன் அதிபருமே அந்தச் சிறார்களுடைய ஹீரோக்கள் தான். அதேவகையில் அந்த வகுப்பில் நேர்த்தியாய் சிலையாட்டம் இருந்த அந்த நங்கை மீது ஏதோ ஒருவிதமான பிடிப்பு அவனுக்கு வந்ததில் அநியாயமேதும் இல்லையே!
அது இன்றைய தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தால் ’காதல்’ என்று அறியாமையால் பெயர் சூட்டப்பட்டு விட்டது. அவ்வளவு தான்.

அத்தோடு அவன் அந்த வகுப்பு ஹீரோவைத் தவிர  யாருடைய சொல்லும் கேட்காது பராக்கு பார்க்கும் குணம் படைத்தவன்.

சரி! இந்தப் பிரச்சனைக்கு என்ன செய்யலாம்? இவனை எவ்வாறு கையாள்வது? இவ்வாறு பலவாறு யோசித்தார் அந்தவழியால் சென்று வரும் அந்த ஆரம்பப் பிரிவுக்கே சம்பந்தப்படாத ஒரு ஆசிரியர். அவரிடம் தான் தினேசின் காதல் கதையும் பரிமாறப்பட்டது.

தினேசோடு உரையாடல் நடக்கிறது. அவனது குடும்பப் பின்புலங்களை இவ்வாறு தான் பெற்றுக் கொண்டார் அந்த ஆசிரியர். அவனது எழுத்து அறிவு அவரது ஆராய்ச்சியில் திருப்திகரமாகவே பட்டது அவருக்கு.


வகுப்பு எடுக்காத ஓய்வு நேரம் அந்த வகுப்புக்கு வந்தார் அந்த ஆசிரியர்.  கண்களில் ஒரு தீர்மானமும் தெளிவும் இருந்தது. இவனை படிக்க வைக்கும் முயற்சியில் தோற்றுப் போன ஹீரோவிடம் சவாலொன்றை தான் கையிலெடுத்துக் கொண்டதாக சொன்னார் அவர்.  இவனை மூன்று தினங்களில் வாசிக்க வைப்பதே அந்த சவால்.

“ தீபா! இங்க வாங்கம்மா. இதை ஒருக்கா சத்தமா வாசியுங்கம்மா. பிள்ளை கெட்டிக்காரப் பிள்ளை என்ன” என்று உற்சாகமூட்டி அவளை வாசிக்க வைக்கிறார். அவளது தொனி, நிலை அனைத்திலுமே ஆசைவற்றவனானான் தினேஸ். பராக்குப் பார்த்த கண்கள் இப்போது பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.இவையே தொடர்ந்தன சில நாட்களாய்....

அந்த ஆசிரியரின் எதிர்பார்ப்பு இவ்வளவு தான். “இங்க வாங்க மகன். இதை ஒருக்கா சேருக்கு வாசிச்சு காட்டுங்க பாப்பம். அவனது அதிரீனலின்களோ இன்னோரன்ன ஓமோன்களோ சுரக்கின்றன. அவன் கண்களில் ஒரு வெறி. முயன்று தவறுகிறான். அந்த ஆசான் தட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கின்றார்.

அடுத்த தினத்திலிருந்து அவனில் மாற்றங்கள். வகுப்பு ஹீரோவையும் அவளையும் பிரதிபலித்தது அந்த மாற்றம்.  அவன் மூன்று நாட்களில் வாசிப்பான் என்ற செய்தியை அவனது தோற்றம் சுட்டி இயம்பியது.

இறுதியில் அவனே வென்றான். அவனது தேடலின் திசை காதலைக் கடந்ததாய் படிப்பில் நாட்டங் கொள்ளத் தொடங்கியது. அவனது திசைகாட்டி அவனையறியாமலேயே காற்றடிக்கும் பக்கமாய்ச் சரிந்து கொள்கின்றது.

இது ஒரு உண்மைக் கதையாகும்.

-சொல்லாடல்: அருள்நிலவன்

Comments