கணேஷ் அண்ணா

முகம் தெரிந்து பழகி பாசத்தை வெளிப்படுத்திய உறவு என்பதற்கும் முகம் அறியாமல், பழகி பாசம் எனும் வலைக்குள் உள்ளீர்க்கப்பட்டிருக்கும் உறவுக்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு.

எவ்வாறோ ஒரு சகோதரனாகவே என் வாழ்வோடு சங்கமித்துவிட்ட சுப்பிரமணியம் கணேஷ் என்ற எனது அண்ணாவுக்கானது இந்தப் பதிவு.

எங்கள் தொடர்பாடல் என்பது மிகச்சாதாரணாமதும் சமூக வலைத்தளத்தால் ஏற்படுத்தப்பட்டதும். ஆனால் ஆரோக்கியமான உரையாடல் மற்றும் ஆங்கிலம் என்னையும் அண்ணாவையும் சொந்த உறவாய் நினைக்கும் அளவுக்கு மெருகேற்றியிருப்பது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.

எங்கள் அயற்கிராமமாகிய நவிண்டிலோடமைந்த கிராமம் தான் அவருடைய பிறப்பினைத் தாங்கியமைந்தது. தனது கல்விக்கப்பால், திருமணம், வேலைவாய்ப்பு இவ்வாறு போக அவரது வதிவிடமானது இங்கிலாந்து நாடு.மேற்குலக வாழ்வியல் நிலைமைகளுக்கப்பால் தன் சுயத்தின் இருப்பினைத் தேடும் பண்பும் சகோதரத்துவமும் மிகுந்த மனிதர் இந்த கணேஷ் அண்ணா. சுயம் என்பது எல்லைப்படுத்தப்படுவது திருமண பந்தங்களின் இயல்பு. அதுவே யதார்த்தமானதும் கூட. மனைவி இரு குழந்தைகள் என்ற வாழ்வின் போக்கும் பாசத்தோடும்  பண்போடும் உறைந்தது அந்தக் குடும்பம்.

இந்த இடத்தில் தான் துஜீவ் என்கிற எனது பிரசன்னம் அங்கு நிகழ்ந்தேறுகின்றது. என் வாழ்வியலின் ஒரு பங்காளனாய் சகோதரன் என்ற பிணைப்போடு ஒரு உறவுப் பிரசவிப்பும் அங்குதான் அலைமோதுகின்றது.  ஆம்! ”தம்பி” என்ற கருத்தின் ஆழத்தை எனக்குள் புகுத்திய மனிதனை, அண்ணாவோ அக்காவோ இல்லாத என்னை ’தம்பி’ என்றழைத்த ஒரே மனிதனை எவ்வாறு மறுதலிப்பது!

ஆயின் நான் பல சோதனைகளைத் தாங்கியிருந்த காலத்தில் நேரிற்கண்ட போதிலும் முகங்கொடுக்க முடியாது போனேன். மறுதலித்ததாய் அல்லது மறுதலிக்கப்பட்டதாய் ஒரு மாயத்தோற்றம் நிகழ்ந்து போகிறது. என்னுள் இருக்கும் உணர்வுகளும் அண்ணா என்ற புரிதலுடன் கூடிய எண்ணங்களும் எவ்வாறு ஒட்டுமொத்தத்தில் இல்லாதொழிந்து போகும்??

மீட்டப்பட்ட நினைவுகளுக்காய் என் மனம் நன்றியறிதலோடு விழிக்கிறது. அண்ணாவின் பிரசன்னத்தின் ஏகுதிசை பார்த்தபடி தபால்காரக் கடவுளர் போல காலக் கடவுளுக்கானது இந்தக் காத்திருத்தல்.

அண்ணாவின் வருகைக்காகவும் அந்தப் பிரசன்னத்தின் பேற்றுக்காகவும் காத்திருத்தலோடு....
-தம்பி துஜீவ்

Comments

Popular Posts