கிறிஸ்துமஸ் நன்நாளில்

கிறிஸ்துமஸ் அதாவது நத்தார் அல்லது பாலன் பிறப்பு எந்தவகையில் முக்கியத்துவம் வாய்ந்தது? எந்தளவுக்கு கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருத்தமானது? இன்றைய காலகட்டத்தோடு இந்தத் தினத்தின் மகிமை தரும் செய்தியின் பங்களிப்பு என்ன? இந்தக் கேள்விகள் எங்களால் அலசப்படவேண்டிய தேவை நிறையவே உண்டு.

இவை வெறும் பண்டிகை அல்லது களியாட்டம் என்ற ரீதியிலும் வெறும் மகிழ்வுக்காகவும் கிறீஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டாலும் இருண்டு கிடந்த மக்களுக்கு ஒளியைக் கொடுத்து, சிந்தனைத் தூறலில் மாற்றங்களையும் விட்டுச் சென்றுள்ளது.
மனிதன் மஹாத்மாவாக வேண்டாம். வெறும் மனிதனாய் இருந்து விட்டுப் போகட்டும். மனிதனாக வாழுதல் மிகச் சாதாரணமான காரியம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். இந்த நத்தார் தினத்திற் தான் கடவுள் மனிதனானார்

கடவுளது மனுவுலக வாழ்வு என்பது சாதாரணமானதன்று. அவருடைய வாழ்விற் கடந்து போன ஒவ்வொரு நிகழ்வுகளும் இடர்களும் சாதாரணமான மனித வாழ்க்கை நடத்துதலின் வலியின் தார்ப்பரியத்தைக் குறிகாட்டி நிற்கின்றன. கடவுளுடைய வாழ்க்கையிலேயே இவ்வளவு துன்பங்கள் என்றால்.....! அது நிச்சயமாகச் சாதாரணமான காரியமன்று என்பது முடிபு

இயேசுவாக அவதரித்த கடவுள் சாதாரண மக்களுக்காக குணப்படுத்தல் மற்றும் பிரச்சினைகளில் அவர்களோடு கூட இருந்து ஒவ்வொரு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் செவிசாய்த்து தானும் அல்லற்பட்டு வாழ்ந்து காட்டிய அந்த இலட்சிய வாழ்வும் அனுபவங்களும் ஒவ்வொருவரது தனிப்பட்ட வாழ்விலும் இன்றைய சமகாலத்தின் தேவைகளை வலியுறுத்தி நிற்பதனை நாங்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது தேவைகள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களோடு நடக்கும் நாம் எம்மீது அளவுக்கதிகமாய்ப் பிரியப்படும் நாம் அதே வாழ்வை மற்றவர்களும் வாழட்டுமே என்ற ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், மற்றவர்களது கருத்துக்களைச் செவிசாய்த்துக் கேட்கிற பட்சத்தில், அன்பு என்ற அடிப்படை விதைக்கப்படும் பட்சத்தில் எமது சாதாரண வாழ்க்கையை நாங்களே உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இயேசு கிறீஸ்து பாலனாய்த் தொழுவத்திற் பிறந்து இந்த உலகுக்கு ஒளிகொடுத்து விட்டுச் சென்றிருக்கின்ற செய்தி இது தான்.

-arulnilavan

 
My idea of Christmas, whether old-fashioned or modern, is very simple: loving others. Come to think of it, why do we have to wait for Christmas to do that?

 -Bob Hope

Comments