ஆறுமுக நாவலர் வரலாறு

நாவலர் பெருமான் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றியவராவார். யாழ்ப்பாணம், நல்லூர் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் ஆகிய இருவருக்கும் புதல்வனாக 1822ம் ஆண்டு அவதரித்தார். இலங்கையும், இந்தியாவும் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்த போது சைவமும், தமிழும் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கிய காலப் பகுதியிலே தான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் தோன்றினார். பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் ஆறுமுகம். வரலாற்றுக்கு முற்பட்ட சமயமாகவும், ஈழம் வாழ் மக்களின் பெரும்பாலானோரது உள்ளத்துள் ஒளி விளக்காய் சுடர்விட்டிலங்குவதுமான சைவ சமயம் அந்நியரது செல்வாக்கு வலிவுற்றிருந்த காலத்தில் நலிவுற்றிருந்தது. இலங்கைக்கு வர்த்தக நோக்கோடு வந்த அந்நிய ஆட்சியாளர் அரசியலாதிக்கத்தைக் கைப்பற்றவும் தற்சமயம் கொள்கையை பரப்பவும் எண்ணங்கொண்டு கல்வி வழிப்பிரசாரம் செய்யத் தலைப்பட்டனர். அந்நியவெற்று நாகரிகப் போக்கில் ஈடுபாடு கொண்ட மக்கள் சுயமசய கலாசார வழிகளை மறந்து வாழ்வாராயினர்.
இவ்வாறு சைவ சமயம் நலிவுற்றிருந்த வேளையில் நாவலர் பெருமான் தனது சொல்லாலும் எழுத்தாலும் மக்களீன் அகக் கண்களை அகலத் திறந்து அவல நிலையை அவர்களுக்கு உணர்த்தியதோடு சைவமும், தமிழும்  புத்துயிர் பெறுவதற்காக தம்மாலியன்ற அத்தனை பணிகளையும் செய்தார். அவரின் கல்விப் புலமையையும், நாவன்மையை யும், சைவத் தமிழ் பணிகளையும் பாராட்டி திருவாடுதுறை ஆதீனம் அவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. சைவம் காத்த நாவலர் பெருமானை சைவமக்கள் ஐந்தாம் சமயக்குரவர் எனப் போற்றுகின்றனர்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும், சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சைவ சமயத்தை அழிய விடாது பாதுகாக்க நாவலர் பல முயற்சிகளை மேற்கொண்டார். சைவ சமயத்தவரிடம் காணப்பட்ட தவறான பழக்க வழக்கங்கள், செயல்கள் என்பவற்றை நீக்க முயன்றார். சைவப் பாடசாலைகளை நிறுவினார். அவர் நிறுவிய முதலாவது பாடசாலை வண்ணார்ப்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலையாகும். அது 1848ம் ஆண்டில் நிறுவப் பெற்றது. தமிழ் நாடு சிதம்பரத்திலும் சைவப் பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் பாடசாலையொன்றை நிறுவி அங்கு போதிப்பதற்கு சைவசமய நூல்களைப் பிரசுரித்தார். இதற்காக சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் அச்சுக்கூடங்களை நிறுவினார்.
சைவ வினாவிடை, பாலபாடம், பெரிய புராண வசனம், கந்தபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் முதலான பல நூல்களை எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஏடுகளில் எழுதப்பட்டிருந்த பல பழந்தமிழ் நூல்களைப் பரிசோதித்து அச்சில் பதிப்பித்தவரும், அத்துறையில் ஏனையோருக்கு வழி காட்டியாக விளங்கியவரும் நாவலர் பெருமானே ஆவார். சைவத் தமிழ்ப் பணிகளை இடையூறின்றி செய்வதற்காக தமக்குக் கிடைத்த உத்தியோகத்தையும் தியாகம் செய்தவர் நாவலர் பெருமான். தமது வாழ்வுப் பரியந்தம் முழுவதும் பிரமச்சாரியாகவே வாழ்ந்தவர். சிவாலயங்களிலும், மடாலயங்களிலும் சைவ சமய உண்மைகளை எடுத்துக் கூறி பிரசங்கம் செய்தல், புராணப் படலம் செய்தல் என்பவற்றினால் சைவப் பிரசாரம் செய்தவர் நாவலர் அத்துடன் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு சைவத்தின் உண்மையை விளக்கி சைவ மக்களிடையே புகுந்துள்ள மாசு நீக்கிப் புறச் சமயத்தவரின் தீவிர பிரசாரத்தை தடுக்க முற்பட்டவர்.

திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோயில் என்பனவற்றின் தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றைப் புனரமைத்து நித்திய, நைமித்திய பூஜைகளுக்கு வழிவகுக்குமாறு சைவ மக்களுக்கு விஞ்ஞாபனம் விடுத்தார். இதன் காரணமாக ஆலயங்கள் மீண்டும் அமையப் பெற்றன. இறைவனின் இயல்புகளும், இறை நெறியின் அறப்பண்புகளும் கற்பிக்கப்படுகின்றன. எமது கலைத்திட்டத்திலே சமயக் கல்விக்கு இன்று முக்கியத்துவம் தரப்படுகின்றது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணர்ந்து எங்கள் நாவலர் பெருமான் நடைமுறைப்படுத்தினார். இலவசக் கல்வி, இலவச நூல்கள், தாய்மொழிக் கல்வி என்று நாடு பெருமைப்படும் கல்விச் சாதனைகளை அன்றே அவர் நிலைநாட்டினார்.
கல்வியழகும், தெய்வ நெறியும், பொலிந்து விளங்கும் ஒரு சமூகத்தைக் காணத்துடித்தார். அதற்காக கடுமையாக அவர் உழைத்தார். “குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல - நெஞ்சத்து நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு” என்ற வாக்கியத்தின் அர்த்தைதின் கர்த்தாவானவர் நாவலர். அவரது வாழ்வின் இலட்சியமே கல்வியாகவே இருந்தது. வசதியான உத்தியோகத்தைப் பெறும் வாய்ப்பிலிருந்தும் அவர் அதனை ஏற்கவில்லை. இல்வாழ்வில் புகவில்லை. இவையனைத்துக்கும் காரணம் சைவ சமய வாழ்வினையும் தமிழர் தம் பண்பாட்டு விழுமியத்தின் கருவியாம் கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்ற வேணவா தம்மிடம் குடிகொண்டிருந்தமை யாகும் என ஒரு சந்தர்ப்பத்திலே தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார் நாவலர்.
நெற்றியிலே நீறுபூசவும், வாழையிலையிலே அமுதுண்ணவும் கூட சுதேசிகளாயிருந்தும் மறுக்கப்பட்ட சூழலில் அஞ்சியஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த அவலங்கள் மாறவும், அன்று அந்நியரின் இன்னல் தாங்காது நாட்டை விட்டே வெளியேறிய கிறீஸ்தவ சமயத்தைச் ஞானப்பிரகாசர் போன்றோரின் பிரார்த்தனைகள் பலிக்கவும் நாவலர் எழுந்தார். எங்கள் கலாசாரம் பிழைத்துக் கொண்டது. சிவநெறி தழைத்து முன்பிருந்த எங்கள் சமயாச்சாரியார்கள் தாம் தரிசனம் செய்யப் போன தலங்களிலெல்லாம் பதிகங்கள் அருளிச் செய்தார்கள். இவரோ தாம் போன் இடங்களிலெல்லாம் லோகோபகாரமாகச் சைவப் பிரசங்கங்களைச் செய்து வந்தார். சமயப் பிரசங்கங்களுடன் சமயாசாரியார்களின் தேவார திருமுறைகளையும் விளங்கச் செய்தவர் நாவலர். அந்த நன்நெறிப் பயணத்திலே தான் எத்துணை இடர்கள், ஆதரவில்லாத போது அந்நியர்கள் இழைத்த இன்னல்கள்.
ஒரு புறம் அடியவர் போன்று வேஷமிட்டு ஏமாற்றும் நம்மவர் செய்கை, மறு புறம் அனைத்தை யும் தம் உறுதியான தெளிந்த உள்ளத்தினால் வென்றார். நாவலர் “நிலையில்லாத என் சரீரம் உள்ளபோதே என்கருத்து நிறைவேறுமோ நிறைவேறாதோ எனும் கவலை என்னை இரவு பகலாக வருத்துகின்றது என்று கூறிய நாவலர் பெருமானின் கருத்தின்படி தமிழ்க் கல்வியும், சைவ சமயமும், அபிவிருத்தியா வதற்கு கருவிகள் மற்றும் முக்கிய ஸ்தலங்கள் தோறும் வித்தியா சாலை தாபித்தலும் சைவப் பிரசாரம் செய்வித்தலு மாகும். இவற்றின் பொருட்டு சிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர்களும், சைவப் பிரசாரகர்களுமே தேவைப்படுவார்கள் என்ற நாவலரின் ஏக்கம் தீர இனைய நாவலர்கள் பலர் எழுந்தார்கள், பெருமானின் பணிகளிலே இவர்களும் கலந்தார்கள்.

1894ம் ஆண்டிலே நல்லூர் கந்தசாமி கோயிலிலே நிகழ்ந்த ஒரு அற்புதக் காட்சியை நாவலர் சரித்திரத்திலே பின்வருமாறு வர்ணிக்கின்றார் கனகரத்தினம் பிள்ளை, கந்தசாமி கோயிற் திருவிழா சமீபித்தபடியால் தேவாரத் திருக் கூட்டச் சிறப்பையும், தேவாரம் முதலியவை திருவிழா காலத்திலே சுவாமிக்குப் பின்னாக ஓதுவதற் சனங்களுக்குண்டாகும் கடவுட் பக்தியையும் மக்களுக்கு எடுத்துக்காட்ட நினைத்து திருவாவடுதுறையினின்று ஓதுவார் சிலரை அழைப்பித்து திருவிழா காலத்திலே அவர்களுக்கும் இங்குள்ள மற்றைய சைவர்களுக்கும் நெற்கு வீதி மடத்திலே புண்ணியவான்கள் சிலரைக் கொண்டு மகேஸ்வர பூஜை செய்வித்து, சுவாமி வீதியிலே உற்சவங் கொண்டருளும் போது சுவாமிக்குப் பின்னாக அவர்களைக் கொண்டு தேவாரம் ஓதுவித்துக் கொண்டு வந்தார். இவர்கள் தமிழ் வேதமாகிய தேவாரத்தை ஓத அதனைக் கண்ட பிராமணர் தாங்களும் வந்து சுவாமிக்குப் பின்னாக வேதம் ஓதுவாராயினார்கள்.
நாவலரும் விபூதி உந்தூறனஞ் செய்து திரிபுண்டரந் தரித்து தலையிலேய சிரமாலையும் கழுத்திலே கண்டிகையுங் கையிலே பெளத்திரமுந் தரித்து யாவர்க்கும் பக்தியை விளைவிக்கத்தக்க சிவ வேடப் பொலிவோடு திருக்கூட்டத் தலைவராய் நின்றார். அத்திருக்கூட்டத்தின் சிறப்பை என்னென்று சொல்வோம்! எதற்கொப்பிடுவோம், சுப்பிரமணிய பெருமானின் அவதாரமாய் விளங்கிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதினாராயிரம் திருக்கூடத்தோடு தோற்றிய சிறப்புக் கொப்பிடலாம்.
தம் வாழ்நாள் பூராவும் தமிழுக்கும் சைவத்துக்கும் சேவையாற்றி வந்த நாவலர் பெருமான் 1879ம் ஆண்டு கார்த்திகை மாதம் மக நட்சத்திரத்தில் இறை பதம் அடைந்தார்.
தமிழுக்கும், சைவத்துக்கும் அரும் தொண்டாற்றிய நாவலர் பெருமானை அவரது குரு பூசை தினத்தில் நினைத்து வழிபட்டு அவர் பெருமை பேசுவோமாக.
நன்றி:  http://www.siruppiddy.net

Comments