இந்தப் பத்திரங்கள் பலமுறை படிக்கப்பட்டே கிழிக்கப்படுகின்றன....



காற்றின் சீற்றம், கடலின் கொந்தளிப்பு, சுட்டுவிடும் சூரியனின் தகிப்பு இந்த மன அனர்த்தங்களின் மத்தியில் மனித வாழ்வு அல்லாடும் போது, ஒரு மனிதனுக்குரிய பண்புகளுடன் தன் இச்சை களைந்து, நோக்கம் கொண்டு கடமையுடன் காற்றாடிச் சுழல்களாய்ச் சுழன்றுகொண்டிருக்கின்ற ஒரு நபருடைய பரியந்தத்தை மீட்டுதல் என்பது வெறும் புகழ்ச்சி ஆகாது.

அன்ரன் அண்ணா என்ற ஒரு வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதனும் எங்கள் பதிவுகளினூடு வரவேற்(க)றப்படுகின்றான்.

இற்றைக்கு பதினைந்து ஆண்டுகளின் பின்னால் 1998 ஆம் ஆண்டு ஹாட்லிக்கல்லூரி வாகைமரநிழலில் பிரார்த்தனையில் கூடியிருக்கும் போது ஒரு பொடியன், சற்றே மெல்லிய கறுவல், கட்டை அண்ணா தனது பத்தாம் வகுப்பிலேயே மீசை, தாடி சவரம் செய்த ஒருவரை (இந்தக் காரணத்துக்காக) திரும்பிப்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதன்பின் 2000 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் அறிமுகம் கிடைத்தது. முதல் அறிமுகமே எங்களுக்குள் ஒரு பலத்த உறவினைக் கட்டியெழுப்பிக்கொண்டது.

 2001.11.03 சனிக்கிழமையிலிருந்து எங்களுக்குள் வந்த கருத்துப் பரிமாற்றமும் அதனால் எழுந்த உறவு நிலையும் என் வாழ்வியல் நிலையில் காத்திரமான தடங்களைப் பதித்துக்கொண்டன.

2001 இலிருந்து அவரை நான் சந்திக்காத தினங்கள் மிகக்குறைவானவையே. ஒழுக்கமும் தைரியமும் பகுத்தறிவுச்சிந்தனையும் என்று எங்கள் சந்திப்புக்கள் என்றும் முக்கியத்துவமானவையாகவே இருக்கும். ”Man is a bundle of emotions” அதாவது மனிதன் ஒரு உணர்வுத் திரட்டு என்கின்ற அவரது வாதமும் அவனுடைய உணர்வுகளுக்கு சரியான முறையில் சிறந்த வடிகாலும் அறுவடையும் கிடைக்கவேண்டுமென்ற அவரது எதிர்பார்ப்பும் பொதுவாக கலந்துரையாடலின் எல்லா நிலையிலும் நிறைந்திருக்கும். மற்றவர்கள் உணரத் தவறிய ஒரு மனிதனை அன்றே நான் உணரத் தலைப்பட்டேனே என்று இன்றுவரை பெருமைப்படுகிறேன்.

இன்றுவரைக்கும் அவரால் என்னில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களாய் நான் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன். அவரின் உச்சரிப்பில் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

தனி வாரிசாக வல்வெட்டித்துறையின் தூய கிறிஸ்தவக் குடும்பத்தைச் சேர்ந்த நல்லாயன் என்றழைக்கப்படும் மண்ணெண்ணை வியாபாரியான மரியநாயகம் அவர்களுக்கும் ஜெயமணி என்ற நல்லாளுக்கும் பிறந்த அன்ரன் சுதாகரனின் வாழ்வு ஆரம்பத்தில் சிறப்பாயிருப்பினும் வறுமை சில ஆண்டுகளின் பின் பீடித்துக் கொள்கிறது. தாயாரின் ரியூசனும் சிறிய கோழிக்கடையுமே வாழ்வின் ஆதாரங்களாகின்றன. ஒவ்வொரு கஸ்டங்களிலும் இயேசு சுமந்த பாரச் சிலுவையையும் கல்வாரிப்பயணத்தையும் நினைவிற் கொள்கிறார். என்றும் இவரது அறையில் முள் கிரீடமணிந்த இரந்தம் தோய்ந்த இயேசுவின் உருவம் இருக்கும். பைபிளும் தாயாரின் வசனங்களும் வழிநடத்தும்.

ஓ. எல் வரைக்கும் ரியூசன் செல்லாது படித்து சிறந்த பெறுபேற்றை அடைகிறார். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை ஹாட்லி வரைக்கும் சைக்கிளில் இயற்கையின் சீற்றங்களைத் தாண்டி வலித்த பயணம் மனதை மென்மேலும் உரமாக்குகிறது.

அன்ரன் அண்ணாவின் தாயார் திருமதி பற்றிமாதா ஜெயமணி மரியநாயகம் அவர்களைப்பற்றி மேலும் இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது. பெண்ணியம் பற்றிப் பேசுகிறவர்கள் அல்லது கவலைப்படுபவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய வரலாறு அவர். நான் அன்ரன் அண்ணாவிடம் செல்லும் போதெல்லாம் அவரின் ஒரு பாசச் செறிவு எங்களில் நிறைந்திருந்ததை உணர்ந்திருக்கின்றேன். அன்ரன் அண்ணா பல்கலைக்கழகப் படிப்புக்ககச் சென்றுவிட்டலும் அன்னாரைச் சென்று தரிசித்திருக்கின்றேன். அங்கு நான் இதுவரை சென்றுவந்திருந்த நூற்றுக்கணக்கான நாட்களில் ஒன்று கூட உண்ணாமலோ குடிக்காமலோ வந்ததாயில்லை. இன்று அந்த இடத்தில் சித்தி திரேசா அன்ரி இருக்கிறார்.

மெல்லிய உருவம், புன்னகை உதிர்க்கும் செந்தளிப்பு முகம் பாசம் கொப்புளிக்கும் வார்த்தைகள் இவை நான் அழைக்கும் ரீச்சரின்(ஜெயமணி அன்ரி) மொத்த உருவம். கோபக்காரனான அன்ரன் அண்ணாவைப் புடம் போட்டு எடுப்பதிலும் ஒரு சிறந்த பிள்ளையாகச் சமூகத்திற்குக் கொடுப்பதிலும் தான் அவரது முக்கியத்துவம் சமூகப் பார்வையில் மேலோங்கி நிற்கிறது. ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்றுக் கொடுங்கள். உங்களுக்கும் ஒரு அன்ரன் கிடைப்பான். அன்னாரின்றேல் அன்ரனுமில்லை (ஒழுக்கம்), அவன் முன்னும் பின்னும் போடும் பட்டங்களுமில்லை (கல்வி).

அண்ணாவுடன் பழகமுன்பே பிடித்த விடயம் மாணவத் தலைவனாய் இருந்த பொழுது எம்மை கடுமையாக நடத்தாததும் தன் நேரத்தின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்திக்கொள்வதுமே. அப்போது நாங்கள் துரைராஜா மண்டபத்தின் மேல் மாடி கிழக்கு முடிவு வகுப்பில் இருந்த பொழுது எங்களுக்கு பாடம் சொல்லித்தருவதும் தான் தனது பாடங்களைக் குனிந்து படித்துக்கொண்டிருப்பதும் நன்கு நினைவிருக்கின்றது. பிற்காலத்தில் குனிந்து பொறுமையுடன் நீ நடக்கும் செயல்கள் தெளிவானவனாய் உன்னை நிமிரவைக்கும்என்ற கோட்பாட்டை என்னுட் புகுத்தக் காரணமாயிருந்ததும் இந்தச் செயலே. தலைவனாய், தான் ஒரு மாதிரியாய் எம்மை இவன் வழிப்படுத்தியிருக்கிறான். அப்போது அதிபராயிருந்த் சிறீபதி சேரோடு உடற்பயிற்சி நடக்கும் சமயம் அளவளாவி பாதையில் மெல்ல நடைபோடும் காட்சி இன்னும் நினைவிலிருக்கின்றது. சிறீபதி சேர் ஊறணியில் வைத்தியசாலையிலிருந்த பொழுது நானும் அண்ணாவுமே அதிக தடவைகள் சந்தித்து ஆறுதலாயிருந்திருக்கிறோம். நானும் அண்ணாவுமாக இரண்டு பேரும் சேர்ந்து மரியதாஸ் சேரை பகிடிக்கு வெருட்டிய நகைச்சுவையான நிகழ்வும் நினைவிருக்கிறது.

2002 ஆம் ஆண்டு யாழ்.மருத்துவபீடத்திற்குத் தெரிவாகிறார், மகிழ்வோடு வழியனுப்பி வைக்கிறோம். அதைவிடச் சந்தோசம் அந்த விதானையாரிடமிருந்து வங்கிய மேட்-50 ரக பழைய மோட்டார் சைக்கிள்.
2004 நான் ஏ.எல். படிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அன்ரன் அண்ணாவுடன் யாழ்.நகரத்திலிருந்த பொழுது இந்த மோட்டார் சைக்கிளில் ஒவ்வொருநாளும் விடிகாலை கோயில் வீதியிலுள்ள குழந்தை இயேசு கோவிலுக்குச் செல்வது ஒரு இனிமையான நிகழ்வு.

எங்களிருவருக்கும் நண்பனான கஸ்ரப்பட்ட ருவான்ஸ் குடும்பத்தின் முன்னேற்றத்தில் அன்ரன் அண்ணாவின் பங்கு நிகரற்றது. இன்று ருவான்ஸ் ஒரு பொறுப்புமிக்க அலுவலராய் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

என்னையும் ஒரு மனிதனாய்க் கணக்கிலெடுத்துக்கொண்டவன், என்னையும் பேச வைத்தவன், அமைதியை எனக்கும் கற்றுத் தந்து தன் வாழ்வுப்பரியந்தத்தில் பகுத்தறிவாளனாய்ப் பரிணமித்துக்கொண்ட ”அண்ணா” என்ற தனியுரிமைக்குரிய, தன்னால் சந்திக்கப்பட்ட இடரை இன்னொருவர் சந்திக்கக்கூடாது என நினைக்கும் இந்தப் பெருமகனான அன்ரன் அண்ணா டொக்ரர் அவர்கள் specialist ஆனமைக்கு (பல காலத்தின் பின் இந்தத் தகுதி கிடைக்கப்பெற்ற ஒரு தமிழர்) மனம் மகிழ்ந்து வாழ்த்துச் சொல்கிறேன்.....

துன்பத்தின்போது தோள்கொடுத்த உண்மையான ஒரு தோழனை என் தம்பி வைத்தியசாலையிலிருந்த பொழுது தான் கண்டுகொண்டேன். எனது தம்பி விபத்தில் படுகாயமடந்த போது என் தூண்களாயிருந்து எனை நிமிர்த்திப் பிடித்ததையும் ஒவ்வொரு நொடியும் எனக்கு ஆறுதலாயிருந்ததையும் மற்றைய எவரும் முன்வரத் தயங்கும் எண்ணுக் கணக்கற்ற உதவிகளை வைத்தியசாலையில் செய்ததையும் இங்கு நினைவிற் கொள்கிறேன்.

அண்ணாவின் உழைப்பு பலரை வாழவைத்துக் கொண்டிருகிறது. ”உணர்வின் வீச்சு ஒரு நூறுபேரை அழிப்பதை விடவும் அமைதி மூச்சு ஒருவனை வாழவைப்பது மேல்.”

-அன்ரனின் பெயரால் அருள்நிலவன்

Comments

Popular Posts