அழியாத நூலாய்..... தீயாகிப் போன ஐயா!

ஒரு விரிந்த புத்தகம்-இன்று
வீசப்பட்டுக் கிடக்கிறது
தன் கனவுகளோடு
காலங்களையும் புதைப்பதற்காய்....
நீண்ட தூரம்
கடந்து வந்த நடையின் சலிப்பு
அங்குதான் ஆறுதல் தேடிக்கொள்கிறது!

காலங்கள் தோறும்
நாளிதளாய் என் தந்தையின்
கடையின் வாசலில்
வாசம் செய்த
அத்தனை அத்தியாயங்களும்;
தேநீர் குடித்தும்
தன் உணர்வுகளையெல்லாம்
தரம்பிரித்தும் கொட்டிய
பக்கங்களுமல்லவா-அங்கு
அடக்கம் செய்யப்பட்டுக் கிடக்கின்றன...

வேலுப்பிள்ளை சற்குணானந்தம்
ஐயா! என்று எம்மால் அழைக்கப்பட்ட
ஒரு அகராதி!
பொய்யொன்றும் இல்லை
ஐயன் சச்சிதானந்தனின் ஈடுபாட்டாளன்;
வாழ்வொடு வாசகனாயிருந்தவனின்
பரியந்தமும் வாழ்வுமல்லவா
மீள்பிரதியெடுக்கப்படாமலேயே
கொழுத்தப்பட்டுக் கிடக்கின்றன....

மீளும் நினைவுகள் மட்டுமே
மிஞ்சியதாய் வழிந்து  கிடக்கின்றன-எம்
கண்களில.....துஞ்சலாய்!
கொஞ்சமும் கள்ளமில்லா
உள்ளத்துணர்வும் எச்சமாய்
உங்கள் தடங்களை
தடவிச் செல்கின்றன.....ஐயா!

இழப்புக்கள் ஈடுசெய்ய முடியாதவை!
வழத்திக் கிடந்த தேகம் பார்த்து
தேம்பியது ஏகம் முழுதும்....
திருப்பிக் கிடைக்காத
வசந்தங்களை
திரும்பிப் பார்க்காது
கடந்து செல்கின்றோம்
தூர்ந்து போய்க் கிடக்கின்ற
நூலகத்தின் தாக்கமாய்
நினைவுகளை மட்டும்
சுமையாய்..... சுமந்தபடி

வெட்டியடுக்கப்பட்ட விறகுகள்
அறியுமா தான் எரித்துவிட்டது
 சூரியனை என்று......?
வீசும் காற்று அறியுமா
ஒரு விடிவெள்ளியையே தாம்
துவம்சம் செய்தோம் என்று....?
தீங்காய் இந்தச் சேதி தீர்ந்தாலும்
தீயாகிப்போன ஐயா
சோதியாய் கலந்தபடியும்
நினைவுகளாய்
கனன்ற படியும்.....

-துஜீவ்
(அருள்நிலவன்)

Comments

  1. நல்ல நெஞ்சத்தின்
    நினைவுகளை மீட்டு
    மனதை நெகிழ வைக்கும் கவிதை

    ReplyDelete
  2. வார்த்தைகளால் வடிக்கப்பட்டவையல்ல நெஞ்சத்தின் உள்ளுணர்வை தட்டியெழுப்பிய உன்னத கவிதை...!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Popular Posts