பிறப்பெடுத்துப்போன பேனா....

என் சட்டைப் பைக்குள்
ஒரு குறைப்பேனா
உதிரம் தோய்ந்தபடி...
இதயக்கூட்டுக்கு மேலே இருந்ததால்
இரண்டும் ஒரே நிறத்தையே
சூடிக்கொள்கின்றன....
பேனாவின் எழுத்துக்களிலும்
இதய நிறத்தின் கசிவு
தவிர்க்க முடியாததாயிற்று....

அது தன் உணர்வுகளை
மேலும் அழுதபடி
அடக்கிகொள்கிறது
அடிபட்ட முண்டமாய்....
இப்போது மீதமிருப்பது
வெறும் தசைப் பிண்டத்தின்
பிரசன்னம் மட்டுமே!
அதையும் ஆக்கிரமித்துக்
கொள்கிறது-அந்த
அக்கிரமத்து நிறம்....

இப்போது பேனா மட்டும்
விழித்துக் கொள்கிறது
ஈர விழியொடு....
தன் உந்துதலின் விசை
தன்னைப் பலவீனனாக்கும்
என்பது
அந்தப் பேனாவுக்குப்
புரியாத ஒன்றல்ல....
மனித வாழ்க்கையின் மகத்துவத்தை
முன்நிறுத்துவதில் பலதடவை
பேனாதானே பங்களித்துப்
போகிறது....

தன் ஒவ்வொரு துளிகளும்
தூளிக் கயிற்றிற் தொங்கும்
குழவியின் வளர்ச்சியின்
மகிழ்வென்று -அந்தப் பேனா
அறியாததொன்றல்ல....
அது அணைகட்டிய
அணிலின் செருக்கொடு
தன் கடமையின் நிமித்தம்
தன் இழப்பொடும் பொருதபடி
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது.....

-அருள்நிலவன்

Comments

  1. வாழ்ந்து வாழ்விக்கும்
    செருக்கு அருமை.
    "...தன் ஒவ்வொரு துளிகளும்
    தூளிக் கயிற்றிற் தொங்கும்
    குழவியின் வளர்ச்சியின்
    மகிழ்வென்று..."

    ReplyDelete

Post a Comment

Popular Posts