பனைமரம்- குறிசுட்டும் வாழ்வியல்

ஓ! என் பனைமரக் காடே
உன் நினைவு இன்னும்
உன்னளவிலும் உயரமாய் என்னுள்....
ஓடறியா என் வீட்டுத்திட்டின்
மேலான கூரைப் பணியாளனே
நீ சிறக்க சிரம்கொண்ட உன் சிறகுகளன்றோ
என் சிரசின் காய்தலைக் கழுவியவை....

உன் மீது நான் கொண்ட காதல்
நுங்கு சுளாவி மோர்ந்த நினைவுகளோடு!
அங்கம் புல்லரிக்க அங்குமிங்குமாய்
அலைகிறதென் அகாலம்....
நான் உன்னில் என்ன விட்டுவைத்தவன் சொல்!
என்னையும் என் நினைவுகளையும் உன்னில்
ஒப்படைத்துவிட்டல்லவா-நான்
ஓட்டம் பயின்று கொண்டிருக்கிறேன்
ஓட்டப் பிணமாய்....

ஓரடிக்குள் அன்றி ஈரடிக்குள்
இறுகியிருப்பாய்;
ஆயின் உன் எழுச்சி மட்டும்!
என் வீட்டுப் பல்லியும் எலியும்
மனிதரான நாங்களும்....
உன் வளையின் வைரியத்தின்
இறுமாப்பிலும் நம்பிக்கையிலும்
வாழ்க்கைப்பட்டிருக்கிறோம்!

என் சிறு வயதில் நான் கடித்து நொறுக்கிய
புளுக்கொடியலும் கிழங்கும்
கூழும் பிட்டும் தின்ற ஒடியல் மாவும்
கொட்டை பிளந்துண்ட பூரானும்
உன் தலையின் நீள்வளையமையவிழையமான
தலைக்குள்ளே தெரியாதபடி முளைக்கத்
துடித்திருந்த குருத்தும்
உன் கேசம் பிளந்து பின்னிய பாயும்
தடுக்கும் கடகமும்
நான் குடித்த முலைப்பாலை
எனக்கு நினைவூட்டுபவை....

நீ என்றும் எம்மில் கொண்ட
எழுச்சிகளாயும்
வீழ்ச்சி தான் காணினும்
உயர்ச்சிகளாயும்
வசந்தங்களைப்
பேசும் எம் வாழ்க்கையாகவே
வசித்துக் கொண்டிருக்கின்றாய்...
உன் வளர்ச்சி உள்ளூர
உற்பவிக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறது
இன்னும்.....

கொட்டை விழுங்கினால்
மரம் முளைக்குமாம்
சின்ன வயதில் அம்மா வெருட்டிய நினைவு!
உன் விதைகள் கூட
முழுமையாய் விழுங்கப்பட்டிருக்கவில்லை
எனினும்
இன்று உன்னையே விழுங்கியதாய்
ஏப்பமிட்டுக் கொண்டிருக்கிறோம்....

-அருள்நிலவன்

Comments

  1. நானும் அனுபவித்ததில் மகிழ்ச்சி

    "புளுக்கொடியலும் கிழங்கும்
    கூழும் பிட்டும் தின்ற ஒடியல் மாவும்
    கொட்டை பிளந்துண்ட பூரானும்.."

    ReplyDelete

Post a Comment

Popular Posts