தீபத்திருநாளில்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய்க் கடக்கின்றன. ஒரு சில விசேடமானவை. சில மகிழ்ச்சியானவை மற்றும் சில மிகச் சாதாரணமானவை.

எங்கள் வாழ்வும் வளமும் மங்காது விளங்குவது எமது பெருவிருப்பு.

ஆயினும் வெற்றியிலிருந்து அதன் பலங்களையும் பலவீனங்களையும் சரியாகக் கணித்துக் கொண்டு பலங்களைத் தக்க வைப்பதும் பலவீனங்களில் கவனஞ் செலுத்துவதுமே எமது அசையாத வெற்றியைத் தீர்ம்னிக்கும்.

இருண்மையும் பொய்மையும் நிறைந்தது இந்த வாழ்வு. இவற்றிலிருந்து விடுபட துறவிநிலைதான் முடிவல்ல. இன்னொருவரை வாழ்த்துவதும் வாழ வைப்பதுமே சந்தோசமானது. இன்று நான் ஒருவருக்குச் செய்கின்ற உதவி பிறிதொருவரால் என்னைச் சேரும். இதில் தான் வாழ்க்கை வட்டம் எனும் தத்துவமும் அடங்குகின்றது போலும்.

ஒருவனை நாம் உண்மையாக நேசிக்கும் போது அவனது குணங்கள் எவ்வளவு எதிரானவையாக இருப்பினும் பொறுத்துக் கொள்ளும் போது அவன் நல்லவனாக இன்றல்ல என்றோ ஒரு நாள் எம்மிடம் திரும்பி திருந்தி வருவான்.

ஆழக்கடல் எந்த ஆற்றையும் மறுதலிப்ப்துமில்லை, நிமிர்ந்து நிற்கும் மலையும் எந்தக் காற்றுக்கும் அசைவதுமில்லை.

பிறப்பதும் வாழ்வதும் சாவதும் தான் சாதனை என்றால் தவளையும் பாம்புகளும் மீனினங்களும் சாதனையாளர்களே! நாங்கள் அறிவியலினால் வேறுபட்டு நிற்கின்றோம். வாசு சொன்னது மாதிரி பணம் தேடும் வாழ்க்கை எங்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாது பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் என பல குதிரைக்குப்போட்ட கடிவாளமாய் சிந்தனைகளுக்குத் தடை போட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை அனைத்திலிருந்தும் மீள எமக்குரிய புரிதல்களிலும் பகுததறிவுச் சிந்தனையிலும் தான் ஒரு துவாரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சைகளுடன் பிறந்த மனிதன், அவ்வாறே வளர்க்கப் பட்ட மனிதன், வளர நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதன் ஆமை மெதுவாகத் தன் ஓட்டிலிருந்து வெகு ஜாக்கிரதையோடு உலகத்தை எட்டிப்பார்ப்பது போன்று துணிய வேண்டும்.

இந்த உலகம் அவனுக்காகவும் பிறர்க்காகவும் விரிந்து கிடக்கிறது. தனக்குரிய இடத்தையும் மற்றவர்களுடைய இடத்தையும் அவன் தெரிவே தீர்மானிக்கின்றது.

இருள் மண்டிக்கிடக்கும் எங்களில் ஒளியாகிய மாற்றங்களிருப்பின் இந்த உலகு எத்திசையும் ஆதவன் கதிரினும் மேன்மையாய் இலங்கும்.

என்றும் என் உறவுகளுக்கு தீபத் திருநாள் வாழ்த்துக்கள்.

-அருள்நிலவன்

Comments