எனக்கும் அவளுக்குமான விம்பம்

உறக்கம் கலைத்து

உன்னை நினைத்தேன்

வீம்பு பிடித்தலையும்

விரகதாபம் பிறந்தது

தீப்பிடித்துக் கனலும்

கண்ணீரின் புனலிலும்

ஒரு வெதுவெதுப்பு இருந்தது

மழைமேகம் இடைநிறுத்திய

தன் முகாரியை

ஓங்காளித்தது

என்ன செய்வது......?

எனக்கும் உனக்குமான

இடைவெளி இரவோடிரவாய்

நீண்டு

உறக்கம் தேடியது..




உன்மீது பிறக்கும்

மோகத்தின்

ஒவ்வொரு நொடியிலும்

புன்னகையினை

நீ உதிர்க்கும்

ஒவ்வொரு நிமிடத்திலும்

மலைக்கும் மடுவுக்குமான

இடைவெளியே எனினும்

எனக்கும் உனக்குமான

உறவின் அந்த நிமிடங்கள்

இமை மூடாமல்

எம் காதலை

உச்சரித்துக் கொண்டிருக்கின்றன




யாரோ ஒருவரின் பால்

உன் கண்மணியின்

சதங்கைகள்

இசைக்கப்பட்டிருக்கவில்லை.......

உன் சம்பந்தத்தினை

அண்டியபடியே

சன்னதம் கொண்டிருக்கின்றன!

Comments