சொத்துரையாம் சத்தியத்துப் பிறப்பு



இன்றைய பொழுதின் இனிமைகளை வாசகர்களுடன் பகிர்ந்தாக வேண்டும்.

ந.சத்தியபாலன் என்னும் ஒரு இலக்கியவாதியை நான் என் துணைவியாரூடாகவே அறிந்துகொண்டது அதிகம்.
நல்லாசானாகவும் வழிகாட்டியாகவும் அவரை நிறுத்தியவர்களுள் ந.சத்தியபாலன் குறித்து நோக்கத்தக்கவர்.


இன்று அவ்வாறான ஆற்றலோனுடன் அருகிருந்து அளாவக்கூடிய அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. இலக்கியத்தின் நுணுக்கங்கள் கருப்பொருள் தொட்டு இரசனை, கருத்தழுத்தத்திற்குரிய இடங்கள் என்று அந்த எளிமையான மனிதன் தொட்டுச் சென்ற பரப்புக்களும் ஆசிரியராக அந்தத் தொழிலின் தார்மீகம், மனநிறைவு என்பனவாக தனது ஆசிரியர்களான குழந்தை ம.சண்முகலிங்கம், தமிழ்க் குழந்தை, தமிழாசிரியர் சண்முகராஜா ஆகியோருடனும் சமகால கற்பித்தல் முறையியலூடாகவும் ஒப்பிட்டதோடு கவிதைகளின் கருத்துச் செறிவை ஆன் ரணசிங்க போன்ற எழுத்தாளர்களூடாகவும் விளக்கிய அந்தப் பண்பு எனக்கு மிகுந்த மனநிறைவையும் உத்வேகத்தையும் தந்தது என்பது மிகையான கூற்று அல்ல.


மொழிபெயர்ப்புக் கவிதைகளை எழுதுமாறு ஒரு மாற்றுருவாக்கத்துக்குரிய(trans creation) விண்ணப்பம் ஒன்று என் பணிக்காயும் விடுக்கப்பட்டிருந்தது. கருத்து ஒருமித்துப் போன இடங்களைப் பின்வருமாறு தொடுகிறேன்:

1.   உணர்வு அறுவடைகளை விட யதார்த்தத்தின் வகிபங்கை முன்னிறுத்தும் யாத்தல். (எடுக்கப்படும் நிதர்சனமான கரு)

2.   சிறிய நுணுக்கங்களை இலாவகமாகக் கையாளும் மொழி ஆளுகை.

3.   விவரணமும் விளக்கமும் கொடுக்கப்படும் இடம்.

4.   மேற்பரப்போடு நின்றுவிடுவதோடன்றி பூமிக்குள் புதைந்திருக்கும் ஆழங்கள் அறியப்படுதல்.


இவ்வாறான கவிதைகளின் வரவு தமிழ் இலக்கியத்தில் சில காரணங்களால் குன்றியிருப்பது நிதர்சனமானது. ஆயின் அந்த அருமையான இரசனையின் பாலும் கலைகளின் பாலும் சமூகப் பொதுப்பார்வையின் பங்களிப்பு அவசியமானதொன்றாகின்றது.


உண்மையில் கவிதைகளின் வாசகனான எனக்கு ஒரு எழுத்தாளனுடைய சொந்த எழுத்துக்களின் பகிர்வுகளைக் கேட்டுத் தரிசிப்பது ஒரு கொடையே! தரிசித்த அந்தக் கவிதை இதோ:

அதுவும்  நானும்



அன்றொரு மாலையில்

விட்டிலொன்றுடன்

பேசிக்கொண்டிருந்தேன்

மின்குமிழொன்றை மோதிஉடைத்து

மின்கம்பியில் தன்னை ஆகுதியாக்கத்

தவித்துக்கொண்டிருந்தது அது

ஏனப்பா இந்த பகட்டு வித்தைகள்                                                                                          

உங்களுக்கெல்லாம் ?

விட்டில்களின் இயல்பே இதுதான்

என்பதனாலா?

ஒரு மின்குமிழாக இல்லாமல்

அது ஒரு பாதுகாப்பற்ற

மெழுகுவர்த்தியாய்

இருந்திருந்தால் இந்நேரம்

நீ ஒரு சகிக்கஇயலாத கருகிய பண்டமாகியிருப்பாய்

அறிவே இல்லையா உனக்கு?

நிறைய இருக்கிறது. பதிலளித்தது அது

ஆனாலும் அதனைப் பயன்படுத்துவதில்

நாம் சலித்துப் போகிறோம்

பழகிய தடத்திலேயே பயணிப்பதில்

அலுத்துப்போயிற்று

அழகின் மீதொரு

தீராத வெறி

ஆறாத தவிப்பு

அழகு நிறைந்தது

நெருப்பு

நாமறிவோம்

அளவு தாண்டி

அதனருகில் சென்றால்

அது நம்மைக் கொன்று விடும்

அதனாலென்ன ?

நீங்காச் சலிப்புடன்

நீண்டதொரு வாழ்வினை

வாழ்வதைக்காட்டிலும்

ஒருகணப்பொழுது களிப்பில் உச்சத்திலேறி

அழகுடன் சங்கமித்து

எரிந்தழிந்து போவது

எவ்வளவோ மேல்

இதனால்தான்

எமது வாழ்வினையே

ஒருதுணிப்பந்தாக்கி

அது எதன் பொருட்டானதோ

அதனை நோக்கி வீசி விடுகிறோம்

ஒருகணத்துளிப்பொழுதேனும்

அழகின் ஓர் அங்கமாயிருப்பது

இனிமையானது…………

அழகினையே அறியாது

உயிர்வாழ்ந்துமடிவதை விடவும்……

வாழ்தல் குறித்த எமது மனப்பாங்கே

வெறுமே வருதலும் போதலுமாயல்லவா

இருக்கிறது

நாம்ஒருவகையில்

மனிதர்களைப்போலிருக்கிறோம்

மிகவும் நாகரீகமுற்றுப் போய்

முன்பிருந்தது போல

 தமது வாழ்வை அனுபவிக்கத்

 தெரியாதவர்களாக………!

விட்டிலின் தத்துவம்பற்றி

அதனுடன் நான்

விவாதிக்கத்தொடங்கும்முன்னரே

எல்லா வகையிலும்

பாதுகாப்பானதென

உறுதிசெய்யப்பட்டிருந்த

சிகரட் லைற்றர் ஒன்றில்

அதுதன்னைப்பெசுக்கி

அழித்துக்கொண்டது!

அதனுடன் எனக்கு

 உடன்பாடில்லை

நான்எனில்

இருமடங்காய் நீண்டதொரு வாழ்வினையும்

அரைமடங்கான மகிழ்ச்சியோடு

ஏற்றுக்கொள்வேன்

இருப்பினும்….

மனதில் ஒரு ஆசை…..

தன்னைத்தானே எரித்தழித்துக்

கொள்ளும்படி மிகத்தீவிரமாய்

விட்டிலைத்தூண்டிய

ஏதோ ஒன்று போல்

எனக்கும் ஏதும் கிடைக்குமா ?

………………………………………………………………………………………………………………

02-09-2012

தமிழில்-.சத்தியபாலன்

From:Mary land

Mc Dougal Little Literature.


மேலும் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களைப் பற்றியிறுக்கும் பொழுது பேராசிரியர் தனது மரணப் படுக்கையிலும் எழுத்தைக் கைவிடவில்லை எனவும் எழுத்து எப்போது நிறுத்தப்படுகிறதோ அப்போதே அவர் தலையெழுத்தும் நிறுத்தப்பட்டுவிட்டிருக்கும். ஆகவே குறிப்பிட்டகாலமாக பேராசிரியரின் உடற்கூட்டில் உயிரைத் தேக்கிக் காத்தது அவர்தம் எழுத்துக்கள் தாம் என்றார்.
 

இவ்வாறாகவே எழுத்துக்களோடு தம் உயிர்களையும் சந்தோசங்களையும் பிணைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனை அறியக்கிடத்ததும் அருகிருக்கக் கிடைத்ததும் என் பாக்கியமே!


-அருள்நிலவன்

Comments

Popular Posts