ஆசிரியராய் இருந்தான ஆசிரியம் மீதான ஒரு பார்வை



அந்தக்காலத்து ஆசிரியம் பற்றி இந்தக் காலத்தில் படித்து ஆசிரியரான நான் பேசுவது மிகச் சவாலானது. ஆயினும் ஜவகர்லால் நேரு எழுதிய உலக வரலாறாய் நம்பிக்கையோடு சில தருணங்களில் கலப்படங்கடந்து பேசுகிறேன்.
 
ஆசிரிய முறைமையின் வளர்ச்சிப் படிநிலையில் குருகுலம், திண்ணை முறைக்கல்வி என்ற சமகாலப் பொருத்தப்பாடற்றவற்றை விடுத்து எம் அறிவோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய, கேட்டறியக்கூடிய 30-40 வருடங்களை பதிவிடுதல் பொருத்தமாகிறது.

என் தந்தையாரது ஆரம்பக் கல்விப் பருவத்தில் அவருக்கு புகட்டிய (அறிவு, பால் அன்போடு ஊட்டுவதைக் குறிக்கிறது) ஆசிரியை ஒருவருடன் 1998 ஆம் ஆண்டளவில் உரையாடியிருக்கிறேன். நான் பொன்னம்பலத்தின் மகன் என்றதும் அந்த முகத்தில் நான் கண்ட பூரிப்பு இன்றுவரைக்கும் கண்டில.

தகப்பனாரிடம் “அப்பா! உங்கட ரீச்சரை இண்டைக்கு கண்டநான்” என்றதும் அவர் பெருமையடிச்ச ”எங்கடை ரீச்சர் மார், அப்ப நாங்கள் மழையிலை நனைஞ்சு போனா தங்கடை சாறித் தலைப்பாலையே தலைதுவட்டி விடுவினம். இப்ப உங்களுக்கு அந்தக் கொடுப்பினம் இல்லை” என்ற பதில் என் ஆசிரியர்களை என்னிடமிருந்து ஒருபடி குறைத்துமதிப்பிடத்தான் வைத்தது.

இன்றைய பொருளாதாரச் சவாலும் பணவீக்கமும் போட்டியும் சவாலும் மிகுந்த தன்னிறைவற்ற இந்தக்காலத்தில் மனிதப்பண்புகள் ஆடம்பரத்தாலும் பணத்தாலும் போலி ஜாலங்களாலும் நிரப்ப்படுகின்றன என்பதே மறுக்கமுடியாத உண்மையாயுள்ளது. கல்வியும் அறிவும் பொருளீட்டத்தின் வலிமை கொண்டு கட்டப்படுவதாய் மாறிவிட்டது.
மதங்களாலும் மனித பேதங்களாலும் கடவுளே அடிவாங்கும் நிலையாய் இன்று.....!

இந்த விறுத்தத்தில் தான் ஆசிரியர்களைப் போற்றும்(?) இந்த நாள் வந்துபோகிறது. முதியோர் தினம், வலுவிழந்தோர் தினம், சுற்றாடல் தினம் என்று புறந்தள்ளப்பட்ட பரப்புகளின் விழிப்புணர்வுப் பரபரப்போ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.

பின்வருவன மிகுந்த வருத்தத்தையும் தகுந்த பாடத்தையும் தருகின்றன:

வகுப்புக்கு வந்து தேவாரம் மட்டும் பாடி சமயம் படிப்பித்தும் நிருவாகமட்டத்தைத் தாழ்த்துவதாய் கதைத்து தம்மைத் தாழ்த்தியும் 20 பக்கங்களில் 10 ஆம் தரத்தில் பாடம் எடுத்தும் தள்ளிவிழுத்தி தம் வஞ்சம் தீர்த்தும் தம் சொந்தப்பிரச்சனைகளை (குடும்பத்தகராறுகள் மற்றும் சக ஆசிரியர் தகராறுகள்) அடியாய் எம்மில் கொட்டியும் எருமை, மாடு, சனியன், மூதேசி, உருப்படாதது, வெருளி என்று வாழ்த்தியும் (?) நிருவாகத்திடம் தாம் பிடிபடக்கூடாதென்பதற்காகவே எம்மிடம் தம் ஐடியாக்களை அவிட்டுவிட்டுத் தப்பியும் தன்னைவிட உவன் பெரியாள் ஆகிறதோ என்று ஆசிரியர் அரங்கில் தட்டிவிட்டு டேய் என்று கூப்பிட்டும் மிரட்டியும் மேலும் அந்தரங்கக் கதைகளை ஆசிரியர் அறைக்குள் கூசாமல் அவிட்டு விட்டு நிரப்பியும் ஊரைப் பேய்க்காட்டி உலகத்தைப் பேய்க்காட்டி பாடத்திட்டத்தையும் வேலைத்திட்டத்தையும் பக்குவமாய் எழுதிவைத்தும் ரியூசனிலை படிக்கிறியள் தானே என்று பேய்க்காட்டியும் கொடுக்கும் மரியாதையை தாம் ஹீரோ ஆவதற்காகப் பயன்படுத்தியும் அப்பா அம்மா உத்தியோகம் பார்க்கவில்லை என்பதற்காக ஒதுக்கியும் வைத்த இத்தனை பாவிகளையும் என் அகராதியில் ஆசிரியர் என்று இத்தால் அழைக்காமல் விடுகின்றேன்.



மேற்சொன்ன அத்தனை சாபக்கேட்டின் மத்தியிலும் நான் பெற்றுக்கொண்டது போல எனது பிள்ளைகளுக்கும் அவலத்தைக் கொடுப்பதில்லை என்ற என் உறுதியின் விழுக்காட்டை அதிகரிப்பதற்கான ஒரு தினமாக இன்றைய நாளை நான் கருதுகின்றேன்.

என் மதிப்பிலும் நெஞ்சிலும் என்றும் பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆசீர்வாதங்களை அள்ளிவழங்கிய தெய்வங்களை இன்று நெஞ்சுருக நினைத்துப்பார்க்கிறேன். நான் சிறியவன் என்று தெரிந்தும் என் அற்ப அறிவுரைகளைச் செவிசாய்த்த சில என் ஆசிரியர்களோடான தருணங்களையும் அவர்கள் தளர்வால் இடறிவிழும் போது தாங்கிப்பிடித்து நிமிர்த்திய என் கடன் தீர்ப்பையும் உணர்வும் நிதானமும் இணைந்த விளிம்பில் நின்று எட்டிப் பார்க்கிறேன். அவன் எங்கடை “பெற்” என்று என் மனைவியிடம் அறிமுகப்படித்தியதாலுண்டான என் பலமிழப்பை மகிழ்வோடு மீட்டிப் பார்க்கிறேன். தன் நண்பனொருவன் இந்தப் புனித்துக்குள் புரண்டெழுகின்றான் என்று தானும் வானலையோடு கடந்தவருடம் களிப்புற்ற நண்பன் வாசுதனின் வாழ்த்துமடல்களோடு நிலவிலும் தெரியும் சுவராய் படுகிறது என் பயணம்.

”ஓ! நீ அங்கை போயிட்டியா என்று ஏணியடியில் நின்று வழிகாட்டியாய் எண்ணி எண்ணிக் களிக்கும் என் தெய்வங்களினால் தீர்ப்பிடப்பட்ட என் பணியை எண்ணிக்கொண்டே என்கடன் தொடர்கின்றேன்.

Comments

Popular Posts